தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் கடந்த ஓரிரு தினங்களாக வதந்தி பரப்பி வருகின்றனர். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி. நேற்று விளக்கம் அளித்திருந்தார், இந்த நிலையில், பீகார் டி.ஜி.பி. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக, பாட்னாவில் உள்ள பீகார் காவல் தலைமை அலுவலகத்தில் இருந்து ஏ.டி.ஜி. ஜே.எஸ். கங்கவார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ பீகார் டி.ஜி.பி. தமிழ்நாடு டி.ஜி.பி.யிடம் பேசியுள்ளார். பீகார் காவல்துறை உயரதிகாரிகள் தமிழ்நாடு காவல்துறை உயரதிகாரிகளிடம் தொடர்பில் உள்ளனர். தமிழ்நாடு காவல்துறையினர் இந்த வீடியோ அனைத்தும் போலியானவை என்றும் தவறாக தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். சில தனிப்பட்ட தகராறுகளின் வீடியோக்கள், பீகாரில் வசிப்பவர்களுக்கு எதிரானது என்று வெளியிடப்பட்டது.
ஆனால், அப்படி ஒரு சம்பவம் அப்பகுதியில் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை இதுதொடர்பாக தொடர்ந்து நடவடிக்கையும், போதிய பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். அனைவரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. பீகார் போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்று கண்டறிய முயற்சிக்கிறது. தற்போதுவரை அதுபோன்ற எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று வடமாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோவையில் நீதிமன்றத்தின் முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்புடைய கொலை வீடியோவையும், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் கும்பல் மோதிக்கொண்ட ஒரு வீடியோவையும் பதிவிட்டு தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருவதாக தவறான தகவலை பதிவிட்டார் மேலும், ஜார்க்கண்ட் அரசு, உத்தரகாண்ட் அரசு, பீகார் அரசு இதை வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவுடன் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி. இது தவறான தகவல் என்றும், இதுபோன்று அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும் விளக்கம் அளித்தார். திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வட இந்தியர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் அதிகளவில் வட இந்தியர்கள் பணியாற்றி வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு பிரிவு என்ற புதிய பிரிவை காவல்துறை நேற்று தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: MK Stalin 70th Birthday: 21 லட்சம் போன்கால்.. 17 லட்சம் செல்ஃபிகள்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..!
மேலும் படிக்க: OPS criticize EPS: “நம்பிக்கை துரோகி இபிஎஸ்; தொண்டர்கள் யோசிக்கும் நேரம் வந்துவிட்டது” - ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!