திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் அர்பிந்குமார் (வயது 42). இவர் திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22662) ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நள்ளிரவு 1.15 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து, பின்னர் 1.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதே ரயிலில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராமலிங்க அடிகளார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த ரயில் விருத்தாசலம் அருகே சென்றபோது டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமாருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இருக்கையில் அமர்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமாரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.






மேலும் இந்த சம்பவம் குறித்து, அர்பிந்குமார் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே போலீசிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, ரயில்வே போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் நிருபர்களிடம் கூறும்போது, சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ் 10 பெட்டியில் 8-வது இருக்கையில் இருக்க வேண்டிய கிருஷ்ணமூர்த்தி என்ற பயணி குடிபோதையில் தனது உடைமைகளை இருக்கையில் வைத்துவிட்டு, ரயில் பெட்டியின் கதவு அருகே நடைபாதையில் படுத்துக்கொண்டார். நடைபாதையில் மற்றவர்களுக்கு இடையூறாக படுத்து தூங்காதீர்கள் என கூறினேன். அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, திடீரென கன்னத்தில் அறைந்து விட்டார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். தற்போது எழுத்துப் பூர்வமாக புகார் அளிப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன் என்றார். அவர் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோதும், பேட்டி கொடுக்கும்போதும் அழுதுகொண்டே இருந்தார். 




இந்த நிலையில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.ஈ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறும்போது, "எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எந்த தொழிலாளி தாக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம். இங்கு மொழி பிரச்சினையில் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது. ஆனால் இந்த விஷயத்தில் அவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம்" என்றார். இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் மீது தாக்குதல் நடத்திய கிருஷ்ணமூர்த்தியை திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.