நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும், அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு முக்கிய நிகழ்வு எதுவும் இல்லை - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,


கேரளாவில் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இது வடக்கு கேரளா - தெற்கு கர்நாடகா கடற்கரை பகுதியில் வழியாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் செல்ல உள்ளது. மேலும், நாளை தென்கிழக்கு மற்றும் அதன் ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் இது வரும் நாட்களில் மேற்கு வட மேற்கு திசை நோக்கி இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து செல்லும். இதனால், அடுத்த வரும் தினங்களுக்கு அதனுடைய பாதிப்பு எதுவும் இருக்காது. மேலும், அந்தமான் கடல் பகுதியில் கிழக்கு பகுதியில் இருந்து நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து அந்தமான் கடலில் தெற்கு பகுதியில் நிலவும் என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்  வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்றார். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லாறு மற்றும் திருவள்ளூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


கனமழை பொறுத்தவரை வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் ஓரிரு இடங்களிலும், சென்னை மற்றும் புற நகர் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று ஒரு நாள் கனமழை பெய்யும் நாளை படிப்படியாக குறைந்துவிடும் என்றார்.


மேலும், மாண்டஸ் புயலின் மிச்ச பகுதி வட தமிழக உள்பகுதியில் நிலவி வருகிறது, அது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு மற்றும் அதன் ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடல் பகுதிக்கு செல்லும் இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு எந்த முக்கிய நிகழ்வு இல்லை என்றார்.


வடகிழக்கு பருவமழை பொறுத்த வரையிலும் அக்டோபர் 1 முதல் இன்று வரையிலும் வடகிழக்கு தமிழகத்தில் மொத்தமாக 401 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இயல்பான அளவுதான். அதேபோல, சென்னையில் 756 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இயல்பான மழையின் அளவு 736 மி.மீட்டர். இயல்பை விட 16 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளது.


சென்னையில் அக்டோபரில் இருந்து இந்த மாதம் 9 ஆம் தேதி முன்பு வரை இயல்பை விட 1% குறைவாக இருந்தது. காஞ்சிபுரத்தில் ஒன்பதாம் தேதிக்கு முன்பு 4 சதவீதம் குறைவாக இருந்தது தற்போது 35 சதவீதம் இயல்பு விட அதிகமாக உள்ளது.


ராணிப்பேட்டையில் புயலுக்கு முன்பு வரையிலும் 19% குறைவாக இருந்தது, இப்போது 10 சதவீதம் அதிகமாக உள்ளது. திருவள்ளூரில் புயலுக்கு முன்பு வரையில் 9 சதவீதம் குறைவாக இருந்தது தற்போது 16 சதவீதம் அதிகமாக இருக்கிறது.வேலூரில் புயலுக்கு முன்பு வரையிலும் 34 சதவீதம் குறைவாக இருந்தது தற்பொழுது 17 சதவீதம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.