புதுச்சேரி தி.மு.க. அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமணவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


அந்த மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,


புதுச்சேரி மீது தனிப்பாசம்


“புதுச்சேரிக்கும், திராவிட இயக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசம் உண்டு. திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கும் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. திராவிட இலக்கியத்தின் தலைநகரம் புதுச்சேரி என கூறலாம்.  கலைஞரின் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுச்சேரி.


கருணாநிதி குடியரசு வார இதழில் பணிபுரியவும், பெரியாருடன் நெருங்கி பழகவும் புதுப்பாதை அமைத்துக் கொடுத்தது புதுச்சேரிதான். இதனால்தான் கலைஞருக்கு புதுவை மீது தனிப்பாசம் உண்டு. அவருக்கு மட்டுமில்லை அவருடைய மகனாகிய இந்த ஸ்டாலினுக்கும் புதுச்சேரி மீது தனிப்பாசம் உண்டு. போட்டி இருக்க வேண்டும். பிரச்சினை இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும். அப்போதுதான் போட்டி போட்டு பணியாற்றுவார்கள்.


திராவிட மாடல்


கலைஞரே பல முறை சொல்லியிருக்கிறார். போட்டி என்பது நமக்குள் இருக்க வேண்டும். பொறாமையாகதான் இருக்கக்கூடாது. நான் என்ன சொல்கிறேனோ, அதை அப்படியே அடிபிறழாமல் ஏற்றுக்கொள்பவர்கள்தான் இயக்கத்தில் இருக்கிறார்கள். அது எனக்கு பெருமை. தமிழ்நாட்டிலே முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம். அங்கு தி.மு.க. ஆட்சி மலர்ந்திருக்கிறது. அப்படி மலர்ந்திருக்கும் ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையுடன் கூறுகிறோம். அப்படி ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கும் தேவைப்படுகிறது. எனக்கும் அந்த ஆசை உள்ளது.


கடந்த சட்டமன்ற தேர்தலில்கூட அந்த வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால், அது போய்விட்டது. அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இப்போது ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிதான். ஆனால், அது மக்களுக்காக நடக்கிறதா? முதலமைச்சர் என்று ஒருவர் உள்ளார். உயர்ந்த மனிதர் அவர். ஆனால், அடிபணிந்து இருக்கிறார். பொம்மை முதல்வராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை குறை சொல்ல விரும்பவில்லை. அவர் நல்லவர்தான்.


புதுவையில் தி.மு.க. ஆட்சி அமைக்கும்


ஆனால், நல்லவர் வல்லவராக செயல்பட வேண்டாமா..? செயல்படவில்லை. ஆளுநர் ஆட்டிப்படைக்கக்கூடிய வகையில் புதுவையில் ஆட்சி நடக்கிறது என்றால் வெட்கப்பட வேண்டாமா? அடங்கி, ஒடுங்கி இருக்கக்கூடிய நிலையில் ஆட்சி நடக்கிறது. ஏதாவது நன்மை நடந்திருக்கிறதா..? அப்படிப்பட்ட நிலையில் புதுவையில் ஆட்சி நடப்பதால்தான் இங்கு  ஆட்சி வர வேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே நாம் இங்கு ஆட்சியில் இருந்திருக்கிறோம்.


நிச்சயமா, தி.மு.க. ஆட்சி மீண்டும் புதுவையில் உதயம் ஆகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே புதுவையில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தியுள்ளோம். நிச்சயமாக, புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக் கூடாது. அதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்ல, அதைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளலாம்.”


இவ்வாறு அவர் பேசினார்.