திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகளுடன் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.


நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி வட சென்னை தொகுதியில் மீண்டும் கலாநிதி வீராசாமி முன்னிலை வகித்தி வருகிறார். 


வாக்காளர்களும், வேட்பாளர்களும்:  


வட சென்னை மக்களவை தொகுதியில், 14,96,224 மொத்தமாக வாக்காளர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதில், 7,30,395 ஆண் வாக்காளர்களும், 7,65,286 பெண் வாக்காளர்களும், 543 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். மக்களவைத் தேர்தல்களில் திமுகவின் கோட்டையாக விளங்குவது வடசென்னை தொகுதிதான். இதுவரை 11 மக்களவைத் தேர்தல்களில் திமுக இங்கே வெற்றி பெற்றுள்ளது. 


வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர்,  ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர்,  கொளத்தூர்,  திரு.வி.க. நகர் (தனி) மற்றும் ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. வட சென்னை தொகுதியில், திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் பால் கனகராஜ், அதிமுக தரப்பில் ராயபுரம் மனோ, நாம் தமிழர் கட்சி தரப்பில் அமுதினி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.


 பதிவான வாக்குகள்:


 நடைபெற்று முடிந்த தேர்தலில், 8,99,367 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 4,51,334 ஆண் வாக்காளர்களும், 4,47,884 பெண் வாக்காளர்கள், 95 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். மொத்தமாக 60.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில்  வட சென்னை தொகுதியில் 64.26 சதவீதம்  வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.


வட சென்னை தொகுதியில் நிலவும் பிரச்சனைகளும் மக்களின் கோரிக்கை:


அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதியாகவும் வடசென்னை உள்ளது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டுமானாலும் அவர்களின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது. வடசென்னையை பொறுத்தவரை முக்கிய பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் என்பது நெடுங்காலமாக தொடர்கிறது. துர்நாற்றம் வீசும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, சுத்திக்கரிக்கப்படாத சாக்கடை கழிவுகள் கடற்கரையில் தொடர்ந்து ரசாயனக் கழிவுகள் கொட்டப்படும் பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.