மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு அரசின் மின்சார துறை சார்பில் அரசின் நலத்திட்டங்களை தொடர்ந்து பெற ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசங்கள் மாற்றி அமைக்கப்பட்டது.


அதன்படி, இன்று அதாவது பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஏற்கனவே போதிய கால அவகாசம் தரப்பட்டுவிட்டது. இனிமேல் கால அவகாசம் தரப்படமாட்டாது” என கூறியுள்ளார்.   


தமிழகத்தில் இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் என அனைவரும் தங்கள் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்தாண்டு அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் தேதி முதல் மின்நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணி தொடங்கியது. 


இணையதளம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில்  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். முதலில் இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால்  பலரும் ஆதாரை இணைக்காமல் இருந்தனர். 


ஆனால் வீடு மற்றும் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர், குத்தகைதாரர், ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதேபோல் இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்ட மின் இணைப்புகளுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 


இதனையடுத்து மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக  மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஆனால் இன்னும் சிலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கால அவகாசம் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை மின் எண்ணுடன் இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது, இதற்குமேல் கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 


ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பது எப்படி? 


மின்  எண்ணுடன் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதாரை இணைத்துக் கொள்ளலாம். அதில் மின் இணைப்பு எண், உங்களுடைய மொபைல் எண் ஆகியவை கேட்கப்பட்டிருக்கும். 


நீங்கள் டைப் செய்தது ஸ்கிரீனில் வரும். அதன்கீழ் நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளரா, , வாடகைக்கு குடியிருப்பவரா, நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளராக இருந்தும் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா ஆகிய ஆப்ஷன்கள் கேட்கப்படும். இதில் ஒன்றை தேர்வு செய்து ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். 


பின்னர் ஆதாரில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை கொடுத்து Submit ஆப்ஷனை அழுத்தினால் போதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.