கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பேசியதாவது:


''மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்வதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. இந்தி திணிக்கப்படவில்லை. மொழித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக்கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது. இதில், மாநில மொழிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


தமிழ் சிறப்பாக உயர்ந்த மொழி ஆகும். பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதைப்போல, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே சுப்பிரமணிய பாரதி பெயரில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.


புதிய கல்விக் கொள்கை காரணமாகத் தமிழ் மொழி பிற மாநிலங்களில்  மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது''.


இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.




தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நெடும் காலமாக மோதல் போக்கு நீண்டு வரும் நிலையில் இன்று ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் கலந்துகொண்டார். 


''கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.


யாரெல்லாம் இந்தி படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்தியைப் படிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தி விருப்ப மொழியாக இருக்கலாம். ஆனால் கட்டாய மொழியாக இருக்கக்கூடாது. சர்வதேசத் தொடர்புக்கு ஆங்கிலமும், உள்ளூருக்குத் தமிழும் உள்ளது. இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறி இருந்தார்''. 


அதற்கு பதிலடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண