நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் ஆனால் அந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நெடும் காலமாக மோதல் போக்கு நீண்டு வரும் நிலையில் இன்று ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் கலந்துகொண்டார். 


கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


''இந்தியாவின் உயர் கல்வியில் 53 சதவீதமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் இந்தக் கல்வி ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குடும்பத் தலைவிகள் தன் மகள்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது.


இதுதான் திராவிட மாடல். இதுதான் பெரியார் தோன்றிய மண். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு. எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளோம்.


நானும் இஸ்ரோ தலைவர் சிவனும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து முன்னேறியவர்கள். கன்னியாகுமரியில் படித்த சிவனும் விழுப்புரத்தில் பிடித்த நானும் முன்னேறியுள்ளோம். சிவம் அரசுப் பள்ளியில் படித்து, அகில இந்திய அளவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். நான் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன்.


இந்திக்கு எதிரானவர்கள் அல்ல


நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. யாரெல்லாம் இந்தி படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்தியைப் படிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தி விருப்ப மொழியாக இருக்கலாம். ஆனால் கட்டாய மொழியாக இருக்கக்கூடாது. சர்வதேசத் தொடர்புக்கு ஆங்கிலமும், உள்ளூருக்குத் தமிழும் உள்ளது. இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 


புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களைப் பின்பற்றத் தயாராக உள்ளோம். இருமொழிக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றுவோம்''. 


இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண