தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்து மற்றும் இயக்கூர்த்திகள் துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் பதிலுரை,
என் கன்னிப்பேச்சு நீக்கப்பட்டது
2011ஆம் ஆண்டு இதே சட்டப்பேரவையில் என்னுடைய முதல் பேச்சை தொடங்கும்போது பேச வாய்ப்பளிக்காமல் என் முதல் பேச்சு நீக்கப்பட்டது. இந்த அவைக்கு நான் வருவதற்கு காரணமாக, நான் மட்டுமல்ல அனைவரும் வருவதற்கு காரணமாக இருந்த தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று சொன்னேன். அந்த பேச்சு நீக்கப்பட்டது என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். தமிழ்நாடு என்று பெயர் சூட்டி இருமொழி கொள்கையை கொடுத்து இந்தியாவில் நாம் சிறந்த மாநிலம் என்று பெயர் பெறுவதற்கு காரணமாக இருந்த பேரறிஞர் அண்ணாவை வணங்குகிறேன். இந்த போக்குவரத்து துறையை மிக சிறந்த துறையாக உருவாக்குவதற்கு, தனியார் பெரு முதலாளிகளிடம் இருந்த பேருந்துகளை நாட்டுடமையாக்கி கிராமங்களுக்கும் பேருந்து செல்ல காரணமாக இருந்த் தலைவர் கலைஞர் அவர்களை நினைவு கூறுகிறேன்.
உதயநிதி ஸ்டாலினுக்கு புகழாரம்
மாநில உரிமைக்கு குரல் கொடுக்கும் முதல்வரை வணங்குகிறேன். எங்களுடைய இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சரின் மகன், நாளைய தினம் இந்த அவைக்கு அமைச்சராக வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் நினைத்திருந்தால் எந்த துறையில் வேண்டுமானாலும் பேசி இருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது இந்த சமுதாயத்திலே யாரும் திரும்பி பார்க்காமல் ஒடுக்கப்பட்டு இருக்கும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பற்றி பேசினார்.
இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுங்க
இந்த துறை தமிழக அரசுக்கு 5,600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரக்கூடிய துறை. இந்த துறையில் உள்ள குறைகளை சீர்செய்ய தகவல் தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சீரமைப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் தொடங்கி உள்ளார்கள். கடந்த 14ஆம் தேதி ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவையை தொடங்கி வைத்துள்ளார்கள். ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், நீட்டித்தல் போன்றவற்றையும் இணையம் மூலம் செய்யலாம். தமிழகத்தில் இருக்கும் வாகனங்களில் 87 சதவீதம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. அதிக அளவில் விபத்துக்குள்ளாகும் வாகனங்களும் இருசக்கர வாகனங்கள்தான். இருசக்கர வாகனத்தை வாங்கும் போது இன்சூரன்ஸ் செய்வதோடு நிறுத்தி விடுகிறார்கள். அதன் பிறகு இன்சூரன்ஸ் யாரும் கட்டுவதில்லை. விபத்தி நடந்த பிறகு நட்ட ஈடு கோரி காவல் நிலையத்திற்கு சென்று ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்கிறார்கள். அனைவரும் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி இதனை செய்ய வேண்டும்
12ஆம் தேதி 14ஆவது ஊதியக்குழு பேச்சுவார்த்தை
48,000 கோடி கடன் சுமைக்கு இடையேதான் முதல்வரின் கருணையால் நிதிகளை வழங்கி இந்த துறை சரியாக இயங்குவதற்கான உதவியை செய்து வருகிறார்கள். 21,000க்கும் மேற்பட்ட அரசுப்பேருந்துகளில் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். 14ஆவது ஊதிய பேச்சுவார்த்தை வருகின்ற 12ஆம் தேதி நடைபெறும் என்ற நல்ல செய்தியை தெரிவித்து கொள்கிறேன்.
போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் பின்வருவன.
- அதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே இந்த விலக்கு 3 வயதாக இருந்த நிலையில் தற்போது 5 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பணப்பரிவர்த்தனை அற்ற பயணச்சீட்டு முறை அறிமுகம்
- பயணக்கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் மூலம் வழங்குதல்
- சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகள் நவீனமயம் ஆக்கப்படும்.
- அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் நடமாடும் பணிமனைகள் உருவாக்கம்
- அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த போக்குவரத்து உதவி மையம் ஏற்படுத்தபடும்
- பேருந்து முனையங்களில் இணைய வழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை அமைக்கப்படும்
- தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தின் பயண சுமை பெட்டிகள் வாடகை விடப்படும்
- இணைய வழி பயணசீட்டு முன்பதிவு மூலம் இருவழி பயண சீட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு பயணச்சலுகை
- திருச்சி, விருதுநகர், ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஓட்டுநர் பயிற்சி மையம்
- பொதுமக்கள் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு வராமலேயே நேரடியாக ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்யலாம்
- பள்ளி வாகனங்களுக்கு முன்புறம், பின்புறம் சென்சார் உடன் கூடிய கேமரா பொறுத்தப்படும்
- ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்கப்படும்
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்கப்படும்
- சிவகங்கை மாவட்ட காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும்