முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவர் சந்தீப் சிங் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழு இது குறித்த மூன்று பக்க அறிக்கையை அளித்துள்ளது.
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது திராட்சை, இனிப்புகள், கேக் உள்ளிட்ட பொருள்களை உண்டார் எனவும், தைராய்டு, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் போன்ற பிரச்னைகளால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மருத்துவர் இக்குழு இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயலலிதாவுக்கு தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாகவும் டிசம்பர் 3ஆம் தேதி அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, டிசம்பர் 4ஆம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுதான் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்பதான் மருந்துகள் தரப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கேள்வி எழுப்ப்பப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலரையும் விசாரித்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு 13ஆவது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கு மூன்று வார கால அவகாசம் கூடுதலாக வழங்கக் கோரி ஆறுமுகசாமி ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு முன்னதாகக் கடிதம் அனுப்பியிருந்தது.
”ஆணைய விசாரணை குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” என்று ஆணையத்தின் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
ஆறுமுக சாமி ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தனது அறிக்கையை ஆணையம் வரும் வாரத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.