அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்தா பல்கலைக்கழகத்திற்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூரில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைகழகம் அரசுக்கு சொந்தமான 58.17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைகழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைகழகம் கூறுவதை ஏற்க முடியாது என்று வாதிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலத்தை மீட்பதற்கு 35 ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கட்டுமானங்களுக்கு ஏன் அனுமதி கொடுத்தார்கள்? ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்? என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியது. அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்று தெரிவிக்கவும் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு தரப்பில் இந்த பிரச்சினை தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக, தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் தமிழக அரசின் நிலத்தை ஆக்கிரமித்து அவர்கள் கட்டியுள்ள இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி கொள்ளும் வகையில் 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தங்களுக்கே ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையை தாங்கள் செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறியது.
ஆனால், அவர்களது கோரிக்கையை நிராகரித்து, நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சை வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்