TN Womens Policy: தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம் அறிவித்து ஓராண்டகியும், அதற்கான செயல்திட்டம் இன்னும் வெளியாகவில்லை.

Continues below advertisement


ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை:


இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதேநேரம், மகளிருக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட திட்டம் ஓராண்டியும் கிடப்பில் இருப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பெண்களின் நலனுக்காக, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு பிபரவரி மாதம் 'பெண்களுக்கான தமிழ்நாடு மாநிலக் கொள்கை' (TNPW) அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாகியும், சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை, அந்த அறிவிப்புக்கான செயல் திட்டத்தை (PoA) இன்னும் வெளியிடவில்லை. கடந்த மாதம் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் அத்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.



அதிர்ச்சி தந்த  ஆர்டிஐ பதில்கள்:


ஆர்டிஐ மூலம் கிடைத்த பதில்களில், 2024ம் ஆண்டு வெளியான மகளிர் கொள்கைக்கான செயல் திட்ட பணிகள் இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 2021 இல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான செயல்திட்டங்களும் இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, பெண்களுக்கான கொளையில் குறிப்பிட்டுள்ளபடி, தலைமை செயலாளர் தலைமையில் துறைசார் செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு கூட இதுவரை ஒரு முறைகூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த வருடத்தில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் ஆர்டிஐ பதில்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், இந்த கூட்டமானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டியது குறிப்பிடத்தக்கது. ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்க இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்பதும் விதியாகும். ஆனால், அத்தகைய கூட்டங்கள் இதுவரை நடைபெற்றதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மகளிர் கொள்கையின் நோக்கம் என்ன?



  • இடைநிற்றலைக் குறைக்க பாலின-உணர்திறன் கல்வி முறையை நிறுவுதல்

  • இளம்பெண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்

  • முறையான/முறைசாரா துறைகளில் பாதுகாப்பான மற்றும் பெண்களுக்கு உகந்த சூழ்நிலையுடன் பணியிடத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது

  • பெண்கள் ஸ்டார்ட்-அப்களை ஆதரிக்கவும்

  • பாலின இடைவெளியைக் குறைக்க டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பது

  • பெண்களின் திறமை இடைவெளிகளைக் குறைப்பது

  • பெண்கள் அரசியலில் பங்கேற்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றை, தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கையின் நோக்கங்களாகும்.


இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் விரைவில் மாநில மகளிர் கொள்கைக்கான, செயல்திட்டங்களை அறிவித்து அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. அதுவே மகளிர் தினத்தன்று தமிழக பெண்களுக்கு வழங்கும் சிறந்த பரிசாகவும் இருக்கும்.