நான் அவன் இல்லை.! அமித்ஷாவுக்கு பதில் மீண்டும் அந்த நடிகரா? போஸ்டரால் சர்ச்சை.!
Amit Shah Poster: அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில், அவரது படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இடம் பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

பாஜக கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டரானது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த போஸ்டரை பாஜகவினரே ஒட்டவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
வருகைதரும் அமித்ஷா:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , 2 நாள் பயணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு அருகே உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், அவரை வரவேற்கும் விதமாக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
ஆனால், இந்த போஸ்டரால்தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. அது என்னவென்றால், அமித்ஷாவை வரவேற்கும் போஸ்டரில் , அமித்ஷா படம் இல்லை; அதற்குப் பதிலாக இயக்குநர் மற்றும் நடிகர் சந்தான பாரதியின் படம் இடம் பெற்றிருக்கிறது.
இதுபோன்ற போஸ்டர், முதல் முறையா என்றால், இல்லை. இதற்கு முன்பும், அமித்ஷா படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படத்தை மாற்றி பாஜகவினர் ஒட்டியதாக சர்ச்சை ஏற்பட்டு, நகைப்புக்கும் உள்ளானது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு உட்பட்ட தக்கோலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில், இந்தியாவின் இரும்பு மனிதரே வருக, வருக, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த போஸ்டரில் பாஜக நிர்வாகி அருள்மொழி பெயரும் இடம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, பாஜக தலைவரின் புகைப்படம், பாஜகவினருக்கே தெரியவில்லை என்றும் விமர்சிக்க ஆரம்பித்தனர். இந்த போஸ்டரானது பல விமர்சனத்திற்கு உள்ளாகியும் நகைப்பு உள்ளாகியும் வந்த நிலையில், இது குறித்து பாஜக நிர்வாகி அருள்மொழி விளக்கமளித்துள்ளார்.
Also Read: Vijay: இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்.! டாப் 10 புகைப்படங்கள்.!
”எனக்கு சம்பந்தம் இல்லை”
அவர் தெரிவித்துள்ளதாவது. மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில், இதுபோன்ற போஸ்டரை ஒட்டி , அசிங்கப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். மேலும் , அதில் அருள்மொழி என்கிற எனது பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த போஸ்டருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன் என்றும் பாஜக நிர்வாகி அருள்மொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்பான போஸ்டரில் , அமித்ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் ஒட்டப்பட்டிருப்பது, மீண்டும் சர்ச்சையாகி உள்ள நிலையில், சிலர் அமித்ஷாவுக்கும் நடிகருக்கும் வித்தியாசம் தெரியாமல் போஸ்டர் ஒட்டிவிட்டு , இப்போது சமாளிக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். இதை வேண்டும் என்றே ஒட்டியது எதிர்க்கட்சியினரா என்றும் சிலர் கேள்விகள் எழுப்புகின்றன.