யாஸ் புயல் காரணமாக 11 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த 22-ஆம் தேதி உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது. இதற்கு ‘யாஸ்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது, தென் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் நிறுத்தும் துறைமுகத்தில் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுகின்றன. வங்க கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலையொட்டி சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய 11 இடங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
கிழக்கு மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி, வடக்கு ஒடிசா - வங்காளதேசம் இடையே நாளை மாலை கரை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது, இந்தப் புயல் தீவிர புயலாக மாறியதைத் தொடா்ந்து, இவ்விரு துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த ஒன்றாம் எண் கூண்டு, இன்று 2-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டாக மாற்றப்பட்டது.
இது வங்கக் கடலில் தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை அறிவிப்பதற்காக ஏற்றப்படுவதாகும். எனவே, மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுவை மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்த புயல் ஒடிசா மாநிலம் பாரதீப்பில் இருந்து 530 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்தது. புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மணிக்கு 165 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘யாஸ்’ புயல் குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.