9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை அளிக்கும் என்எம்எம்எஸ் தேர்வை இன்று தமிழ்நாட்டில் 2.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்காக தமிழகம் முழுவதும் 847 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.


ஏழை, எளிய மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.


இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


எனினும் 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும். எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு. 


பாடத் திட்டம்


இந்தத் தேர்வுக்கெனத் தனி பாடத்திட்டம் எதுவுமில்லை. 7 மற்றும் 8ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களில் இருந்து பொதுவான கேள்விகள் கேட்கப்படும். மன திறன் சோதனை (MAT)மற்றும் உதவித்தொகை சார் திறன் சோதனை (SAT) என இரண்டு தாள்களாகத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வு இன்று (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற்றது. இந்த தேர்வை 2.75 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், இதற்காக தமிழகம் முழுவதும் 847 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.


அங்கீகாரம் பெற்ற அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், இந்தத் தேர்விற்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பித்தனனர்.


கடந்த ஆண்டைப்‌ போலவே இந்த வருடமும்‌ எமிஸ்‌ அடிப்படையில்‌ மாணவர்களின்‌ பதிவு நடைபெற்றது. எனவே, பள்ளிகளுக்கான பதிவு எண், பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மாணவர்களின்‌ எமிஸ் எண்ணினை பதிவு செய்தவுடன்‌ விவரங்கள்‌ உடனடியாக திரையில்‌ தோன்றியது‌. அவ்விவரங்களில்‌ ஏதேனும்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌, திருத்தங்களை மேற்கொள்ளவும்‌, விடுபட்டுள்ள விவரங்களையும்‌, புகைப்படத்தையும்‌ பதிவேற்றம்‌ செய்தால்‌ போதும் என்று தெரிவிக்கப்பட்டது‌. 


2.75 லட்சம் மாணவர்கள் 


இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்வை, 2.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்காக தமிழகம் முழுவதும் 847 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு 90 கேள்விகள் என்ற அடிப்படையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 2.75 லட்சம் பேரில் இருந்து 6,695 தமிழக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.