நெய்வேலியில் என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளது. அங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இராட்சத இயந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் நடக்கிறது.  


தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 


நெய்வேலி என்.எல்.சி. நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பேசிய அன்புமணி, “300 கிராமங்களில் 300 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு  விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் போடப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையை ஏவி பொக்லைன் இயந்திரம் வைத்து நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர்.இன்றைய போராட்டத்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது மண்ணையும் மனிதனையும் காப்பாற்றும் போராட்டம்” எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? நிலக்கரியை எரித்து மக்களின் உடல்நிலையை பாதிக்க காரணம் என்.எல்.சி தான். மூன்று தலைமுறைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நாளை தொடங்கப்பட்டால் ஒட்டுமொத்த மாவட்டமும் கூடி சாலை மறியல் போரட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார். 


இந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல் எறிந்தனர். அவர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதாக கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். முன்னதாக முற்றுகை போராட்டம் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அன்புமணி கைது செய்யப்பட்ட வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும் தண்ணீர் பாட்டில், கொடிக்கம்பம் உள்ளிட்டவை காவல்துறையினர் மேல் எறிந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. 


போராட்டம் கட்டுக்குள் வந்தது


வடக்கு மண்டல ஐஜி ஆய்வு 


என்.எல்.சி.-யில் பா.ம.க. தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதை அடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. 


என்.எல்.சி. நுழைவுவாயிலில் வன்முறை நடத்த இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்து வருகிறார். வன்முறையில் காவலர்கள் சிலர் காயமடைந்த நிலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் அய்வு செய்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.