NLC Mining Expansion: நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம்  மேற்கொண்டு வரும் சுரங்க விரிவாக்க பணிக்கு  கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

என்.எல்.சி நிறுவனம்: 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் நிலங்களை கையகப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கப்பட்டது. சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது.  பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது.  தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பயிர்களின் அறுவடைக்கு பின், கால்வாய் வெட்ட வேண்டும் எனவும், கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், சேத்தியாத்தோப்பு, நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் சாலையில் டயர்களுக்கு தீ வைத்து எரித்தும், அரசு பேருந்துகள் மீது கல்வீசியும் உள்ளனர்.  இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. சுமார் 300க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வலுக்கும் கண்டனங்கள்: 

அன்புமணி:

விளைந்த பயிர்களை அழித்து என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதை கடலூர் மாவட்ட உழவர்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி  வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன்: 

விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும் என்றுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

சீமான்: 

விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளை கைது செய்யும் போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்  என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க 

Annamalai RN Ravi Meeting: ஆளுநர் ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?

Senthil Balaji: மூன்றாவது முறையாக.. அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்