புல்டோசர் கொண்டு விளைநிலங்களை அழித்த என்.எல்.சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்ததுடன், சராமாரி கேள்விகளைக் கேட்டுள்ளது. 


நேற்று கடலூர் மாவட்ட என்.எல். சி நிர்வாகம் நெல் பயிரிடப்பட்ட வயல்களில் புல்டோசர் கொண்டு கால்வாய்களைத் தோண்டியது. இது தொடர்பான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் அவர் பயிர்களை அழிக்கும் காட்சியை பார்க்கும்போது அழுகையே வந்து விட்டது என தனது வேதனையை நீதிபதி தெரிவித்தார். 2 மாதங்கள் என்.எல்.சியால் காத்திருக்க முடியாதா? என கேள்வியும் கேட்டுள்ளார். மேலும் அவர், ஆயிரம் காரணங்கள் கூறினாலும் ஏற்க முடியாது. சமகாலத்திலேயே நாம் பஞ்சத்தை சந்திக்கபோகிறோம் என வருத்தத்தையும் தெரிவித்தார்.


மேலும், நிலத்தை தோண்டி தோண்டி மீத்தேனையும் நிலக்கரியையும் எடுத்துக்கொண்டே போனால், வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலாரின் ஊரிலேயே பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது எனவும் தனது வேதனையை நீதிபதி தெரிவித்தார். 


மேலும், ஒரு ஏக்கர் நிலத்துடன் மகாராஜா போல வாழ்ந்த விவசாயிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவரால் மற்றவரிடம் வேலை செய்வதென்பது முடியாத காரியம். நமது தலைமுறையினர் அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நாம் பார்க்கத்தான் போகிறோம் என நீதிபதி தெரிவித்தார்.