இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்தாகவும், மேலும் இவர் மீது ஆள் கடத்தல் நில ஆக்கிரமிப்பு என இன்னும் பல குற்ற வழக்குகள் இவர் மீது குவிந்து வருகிறது. 


இந்தியாவிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியதாகவும், தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும் என்றும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென்றும் அறிவித்து அதிரவைத்தார்.


இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக அவ்வபோது அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவும் நிகழ்த்துகிறார்.


இந்தசூழலில், கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக செய்திகள் பரவியது. இப்படியான செய்திகளை தன் ஞான கண்களால் அறிந்த நித்தி, துவண்டு கிடந்த தன் பக்தர்களை துள்ளிக்குதிக்க வைக்கும் விதமாக தான் மரணிக்கவில்லை என தனது முகப்புத்தகத்தில் முத்தான கடிதத்தை பதித்தார். 


நித்திக்கு உடல்நிலை குறைவு காரணமாக மரண பயம் வந்தாலும், வெளிநாடுகளின் உறவை வலுப்படுத்தும் முயற்சியில் தன் ஆதரவாளர்களை கொண்டு ஆழம் பறித்து கொண்டு இருக்கிறார் நித்தி. அதன் பலன்தான் இந்த ஆப்பிரிக்க நாடான கானாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். 


நித்தி பாதையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் :


ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டின் எஃபுட்டு (Effiuru) நகராட்சியுடன் நித்தியின் ஒன் அண்ட் ஒன்லி கைலாசா நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டால் கல்வி, மருத்துவம், கலாச்சாரம், மொழி சார்ந்த துறைகளில் கானா மற்றும் கைலாசா இணைந்தும், திட்டம் வகுத்தும் ஒரு கலக்கு கலக்கும். 


மேலும், கைலாசா நாடுடன் பல துறைகளில் அறிவுசார்ந்து செயல்படும் ஸ்லோவேனியாவிலுள்ள பிரான் (Piran) நகராட்சியுடனும் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன் காரணமாக ஸ்லோவேனியாவுடன் கைலாசாவிற்கு ஆரோக்கியமான உறவு ஏற்படும். ஸ்லோவேனியா ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோ அமைப்பிலும் உறுப்பினராக இருப்பதால் கைலாசாவிற்கு பக்கபலமே என்று கருத்தை பரப்புகின்றனர் நித்தியின் பக்தகோடிகள். 


கைலாசா நாடு ஒப்பந்தம் செய்யுள்ளதாக கூறப்படும் இந்த இரு நாடுகளும் இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்கக்கூடியவை. எனவே இந்த ஆபரை பயன்படுத்தி கைலாசா நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருக்கும் பக்தசிகாமணிகள் பறவையாய் இரு நாடுகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் பறக்கலாம். 


என்னது தேர்தலிலும் நித்தி பக்தர்கள் போட்டியா..? 


கைலாசா நாட்டின் பாஸ்போர்ட் உள்ளவர்கள் இந்த ஒப்பந்தம் மூலம் கானா, ஸ்லோவேனியா நாட்டின் குடியுரிமையை பெறலாம். இந்தக் குடியுரிமையை மட்டும் பெற்றுவிட்டால், இரு நாடுகளின் தேர்தல்களில்கூட நித்தி பக்தர்கள் போட்டியிட முடியும்.


இதுபோக, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியனில் அங்கம்பெற்றுள்ள நாடுகளிலும் சுதந்திர பறவையாய் வலம்வர முடியும். சர்வதேச அளவில் கைலாசாவை அங்கீகரிப்பதற்கு ஆட்சி அதிகாரம் முக்கியமென்பதால் நித்தியானந்தா, முதற்கட்டமாக கானாவின் எஃபுட்டு, ஸ்லோவேனியாவின் பிரான் நகராட்சி சபைகளுக்கான கவுன்சிலர் தேர்தலில் தன் ஆதரவாளர்களைக் களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் பரபரவென செய்தி படையெடுக்கிறது. 


நித்தி உடலை ஆட்கொண்டதா தொற்றுநோய்..? 


நித்தியானந்தா நீண்ட காலமாக சிறுநீரகப் பிரச்னையால் தவித்து வருவதாகவும், மொரீஷியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றமில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், தோல் சம்பந்தப்பட்ட சில தொற்றுநோய்களும் நித்தி உடலை ஆட்கொண்டதாக தெரிகிறது.


தேடி வரும் காவல்துறையினரிடம் சிக்காத நித்தி, தொற்றுநோயுடன் சிக்கி கொண்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.