அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாது என்பன போன்ற விஷயங்களை ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த மனுவிற்கு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவ்வப்போது ஓபிஎஸ் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என்கின்றனர்.ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்பன போன்ற விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் மனு:
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு (இ.பி.எஸ்) அதிகாரம் இல்லை. தற்போதும் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்தான். மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு அளித்த மனுவில், 12.09.2017 அன்று அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் துணை விதி 20-A-ன் படி உருவாக்கப்பட்டன என்று தாழ்மையுடன் சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த நேரத்தில், விதி 20-A (2) இன் படி, மேற்கண்ட இரண்டு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. விதி 20-A (3) இன் படி, மேற்படி பதவிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்தத் திருத்தங்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 29-A (9) இன் படி, மாண்புமிகு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போதிருந்து, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் துணைச் சட்டங்களின்படி தங்கள் பணிகளைச் செய்துள்ளனர். கட்சியின் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் சின்ன விதிகள் 1960 ஆகியவற்றின் படி சட்டப்பூர்வமான கடமைகள். அதன்பின், அ.தி.மு.க மாண்புமிகு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பல தேர்தல்களை சந்தித்துள்ளது.
23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம்:
கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு என பிரிந்துள்ளதால் மீண்டும் கட்சி பிளவுபடுமோ என்ற அச்சம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்