இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்ததாக, அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ வெளியிட்டது தமிழ்நாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்து மத சாமியார் நித்தியானந்தாவுக்கு பிடதி, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. குறிப்பாக இந்தியா முழுவதும் 41 இடங்களில் நித்தியானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன.
லட்சக்கணக்கில் நிதி உதவி
உலக அளவில், நித்தியானந்தாவுக்கு பெருமளவில் ரசிகர்களும் சீடர்களும் உள்ளனர். இவர்கள் லட்சக்கணக்கில் நன்கொடை, நிதி உதவி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பிரபல நடிகை ஒருவருடன் நித்தியானந்தா நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் சீடர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூருவில் அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவை விட்டே நித்தியானந்தா தலைமறைவு
தொடர்ந்து இந்தியாவை விட்டே நித்தியானந்தா தலைமறைவு ஆனார். 2020ஆம் ஆண்டு கைலாசா என்னும் இந்து நாடு உருவாக்கப்பட்டதாக அறிவித்தார். தன் நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றை உருவாக்கி நித்தியானந்தா வெளியிட்டார்.
வடக்கு பசிபிக் தீவுகளில் ஒரு நாடே கைலாசா என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நித்தியானந்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரும் தனது தினசரி ஆன்லைன் பிரசங்கத்தைக் குறைத்துக் கொண்டார்.
பழைய உற்சாகத்துடன் இல்லை
இதற்கிடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும் அதில் உண்மையில்லை என்று நித்தியானந்தாவே வீடியோவில் தோன்றிப் பேசினார். ஆனாலும் அவர் தனது பழைய உற்சாகத்துடன் பேசவில்லை, களைப்பாக உள்ளார், உடல்நலக் குறைவுடன் இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்த நிலையில், நித்தியானந்தா மரணம் அடைந்ததாக அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை அன்று வீடியோவில் பேசி இருந்தார். இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்ததாகவும் அவர் கூறி இருந்தார்.
4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து யாருக்கு?
இந்தத் தகவல் வைரலாகப் பரவி வரும் நிலையில், நித்தியானந்தா உருவாக்கியதாக அறிவித்துள்ள கைலாசா நாடும் அவரின் தியான பீடத்துக்கான சொத்துகளும் என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
நித்தியானந்தாவுக்குக் கீழே சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் நித்தியானந்தாவின் உடன் இருக்கும் நடிகை ரஞ்சிதாவின் கட்டுப்பாட்டில் வரும் என்று கூறப்படுகிறது.