டெல்லியில் அண்ணாமலைக்கு பளார் பளாரென அறைந்து அனுப்பிவிட்டனர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்று வந்தார். இபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை பார்த்து வந்த உடனேயே அண்ணாமலையும் டெல்லி சென்று வந்தார்.
அப்போது இபிஎஸ்சிடம் நீங்கள் சென்று வந்ததுமே அண்ணாமலை செல்கிறாரே? கூட்டணி பேச்சுவார்த்தையாக என கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இபிஎஸ், அது அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் மக்கள் பிரச்சினைகளை பேசினேன். கூட்டணி பற்றி பேசவே இல்லை என விளக்கம் அளித்தார் இபிஎஸ்.
ஆனால் இபிஎஸ் அமித்ஷாவிடம் சில கோரிக்கைகளை வைத்ததாகவும் அதற்கு அமித்ஷா ஓகே சொன்னதாகவும் தகவல் பரவியது. அப்போது எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருந்தால் அதிமுக – பாஜக கூட்டணி சாத்தியமில்லை என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பாஜகவின் புது அத்தியாயத்தை எழுதப்போவதாக எண்ணி கூட்டணி கட்சியின் தலைவர்களையே அண்ணாமலை சரமாரியாக சாடினார். இதனால் கொதித்தெழுந்த அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்ற பேச்சு நிலவியது.
ஆனால் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்ற அதிமுகவின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து மீண்டும் பாஜகவுடனேயே கூட்டணி வைக்க இபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார்.
அண்ணாமலையை சற்று அடக்கி வைத்து பாஜக தலைமையும் அதிமுகவை கூட்டணியில் இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதனிடையே பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையையும் தலைமை தூக்கு முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.
பாஜக தலைமைக்கு ஏற்கெனவே நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் போட்டியிட்டுக்கொள்வதாக தகவல் கசிந்தன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என வெளிப்படையாகவே தமிழிசை போட்டு உடைத்தார். ஆனால் உட்கட்சி பூசல் அவ்வபோது இருக்கத்தான் செய்கிறது.
இதையடுத்து டெல்லி சென்று வந்த அண்ணாமலை வழக்கம்போது திமுக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் தரப்படும் உணவு சுகாதாரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் “ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் அவருக்கு. அவர் டெல்லி சென்று வந்தார். அங்கே பளார் பளாரென அறிந்து அனுப்பிவிட்டனர்.
அதை மறைக்க இங்கே வந்து இப்படி பேசுகிறார். அவரது குற்றச்சாட்டின் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும். அவர் சொல்வது உண்மையெனில் வருத்தம் தெரிவித்து அந்த குறைகளை சரிசெய்ய தயாராக உள்ளோம்.
குறைகளை கூட குற்றச்சாட்டுக்களாக சொல்லும்போதுதான் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.