மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜனவர் 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்திய சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர்.






 


இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாளேடு ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு, நிர்மலா சீதாராமன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு:


இதேபோன்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளை கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள் அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர். கோயில்கள் மட்டுமல்லாது திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொது மக்களும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், திமுக அரசின் காவல் துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளனர். எந்தவொரு ஜனநாயக ஆட்சியிலும் நடக்க முடியாத அட்டூழியம் இது” என குறிப்பிட்டு இருந்தார். ”அரசியல் சட்ட பிரிவு 26 ன் படிஅரசு ஆன்மிக/பூஜை விஷயங்களில் தலையிட முடியாது.  தடுத்தால் தடையை உடைத்து நம் மத உரிமையை, கடமையை நிலை நிறுத்துவோம்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.






அறநிலையத்துறை விளக்கம்:


இந்நிலையில், தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.


இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “திரு. சேகர் பாபு அவர்களே, உங்கள் ட்வீட்டுக்கு பதில் கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறை, மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை TN முழுவதும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது.மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள்” என கூறியுள்ளார்.