நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். 


முன்னதாக நேற்றும் கனமழை காரணமாக இந்த இரண்டு தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் இலேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.