Chennai NIA Raid: சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஐதராபாத்தைச் சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட முகில் சந்திரா, கொளத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஆவடியிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. 


தொடரும் என்.ஐ.ஏ சோதனை:


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் விசாரணை மற்றும் சோதனை திவிரமடைந்து வருகிறது. கடந்த வாரமும் கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்ற இடங்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை:



  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபர் விஷ்ணு பிரதாப் வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் 5.00 மணி நேரத்திற்கும் மேலாக  சோதனை செய்து செல்போன் மற்றும் புத்தகங்களை கைப்பற்றி சென்றனர். 

  • கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான இவரது வீட்டில், தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

  •  காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான முருகன் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

  • திருச்சி மாவட்டத்தில் சண்முகா நகரில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன் முடிவில் சில புத்தகங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.


சோதனையின் அடிப்படையில், நேற்று என்.ஐ.ஏ., அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணைக்கும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்நிலையில் தான் ஐதராபாத்திலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொளத்தூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.