TN Special Bus: முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வரும் 9ஆம் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேருந்து சேவை:


தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். 


குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


500 சிறப்பு பேருந்துகள்:


இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10/02/2024 (சனிக்கிழமை) மற்றும் 11/02/2024 (ஞாயிறு) முகூர்த்தம் ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு 09/02/2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் 09/02/2024 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 500 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11,429 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் மற்றும் ஞாயிறு அன்று மட்டும் 11,027 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.


இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது




மேலும் படிக்க


Sarath Kumar: மக்களவைத் தேர்தல்.. பாஜக கூட்டணியில் சரத்குமாரின் ச.ம.க., கேட்கும் தொகுதிகள் இவ்வளவா?


Dhayanadhi Maran: வன்மத்தில் நிர்மலா சீதாராமன்; கோழி பிடிப்பவரை போன்று பேசும் பிரதமர் மோடி - தயாநிதி மாறன் விமர்சனம்