தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிசி 124, 379, 436, 353 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும் வெடி பொருள்கள் சட்டம் 1908 பிரிவு 3, 4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகியவற்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, சென்னை கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக நடந்து வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.
இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் (42) என்பது தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவசர கதியில் கைது நடவடிக்கை
அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இவ்வழக்கில் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” எனபன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
ஆளுநர் மாளிகை அளித்த புகாரை தொடர்ந்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை டிஜிபி அலுவலகம் வெளியிட்டது. கருக்கா வினோத் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
என்னென்ன பிரிவுகளில்?
இந்த நிலையில், கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிசி 124, 379, 436, 353 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும் வெடி பொருள்கள் சட்டம் 1908 பிரிவு 3, 4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகியவற்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.