சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு மீதமுள்ள இழப்பீட்டு தொகை  இன்று வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 


என்.எல்.சி நிர்வாகம்


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல் வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த ஜூலை 26 ஆம் தேதி புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் உள்ள விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது.


இதுதொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான தொண்டர்கள் இந்த சம்பவம் தொடர்பாக என்.எல்.சி முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


நீதிபதிகள் உத்தரவு 


இதனிடையே விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கையகப்படுத்திய பிறகு நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்?. வேலி அமைக்காதது தவறு என என்.எல்.சி நிர்வாகத்தை கேள்வியெழுப்பியது. அதேபோல் அந்த நிலத்தில் அவர்கள் விவசாயப் பணிகளை மேற்கொண்டது தவறு எனவும் தெரிவித்தனர். 


எனவே ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக  வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின் அந்த நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


இழப்பீட்டு தொகை பெறலாம்


இந்நிலையில் இழப்பீட்டு தொகையில் ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் இன்று வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 88 விவசாயிகளுக்கான காசோலைகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு இன்று காலை 10 மணி முதல் காசோலையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.