ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியுள்ளது. இந்தியாவில் இன்றைய காலை நிலவரப்படி 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒமிக்ரானை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டுக்கு மருத்துவர் வினிதா தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தனர். இவர்கள் தொடர்ந்து 5 நாள்கள்வரை தமிழ்நாட்டில் தங்கி ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தமிழ்நாட்டில் ஒமிக்ரான்(Omicron) பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 118 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பின்னரே எத்தனை பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரங்கு தொடர்பாக டிசம்பர் 31ஆம் தேதியன்று முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு தெரியவரும். கடந்த சில நாள்களாக சென்னையில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துவிட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படும். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம்” என்றார்.
ஒமிக்ரானின் பாதிப்பு ஏற்கனவே அதிகரித்துவரும் சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதித்தால் மேற்கொண்டு அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டிசம்பர் 31ஆம் தேதி முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்