நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயதிறந்தவெளி சேவியர் அரங்கில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ள நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு திருப்பலி நடத்தப்படுவது வழக்கம், இந்த திருப்பலியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னை முதல் கன்னியாக்குமரி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள். அவர்கள் விடியற்காலை விண்மீன் கட்டிடத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்து கொள்வதோடு கடற்கரையில் கூடி ஆரவாரத்துடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி வழக்கமாக விடியற்காலை விண்மீன் கட்டிடத்தில் நடத்தப்படும் புத்தாண்டு சிறப்பு திருப்பலியானது கடந்தாண்டு போலவே இந்தாண்டும் திறந்தவெளி அரங்கமான சேவியர் திடலில் நடைபெறுகிறது . தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெறும் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் பங்குத்தந்தை அற்புதராஜ் அருட்தந்தையர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பங்களிப்புடன் புத்தாண்டை வரவேற்கும் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்றிலிருந்தும் புதிதாக பரவிவரும் ஓமைக்ரான் தொற்றிலிருந்து உலக மக்கள் மக்கள் விடுபட்டு நல்வாழ்வு வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வழியனுப்பும் விதமாகவும் 2022 ஆண்டை வரவேற்கும் விதமாகவும் விளக்கு ஏற்றப்பட்டு புத்தாண்டை வரவேற்றனர். ஆலயத்தை சுற்றிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் நாகை புதிய கடற்கரை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை உளிட்ட மாவட்டத்தின் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொது மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயத்தில் 2022 புத்தாண்டு தொடக்க ஆராதனை திருப்பலி நிகழ்ச்சியில் பக்தர்கள் நேரடியாக வருவதை தவிர்த்து அவரவர் இல்லங்களில் இருந்து பேராலயத்தின் மூலம் ஒளிபரப்பப்படும் சமூக வலைதளம் மற்றும் தொலைகாட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சியின் வழியாக கண்டுகளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெரும்பாலானோர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி உள்ளனர்.
மேலும் ரிசார்டுகள், ஹோட்டல்கள், கேளிக்கை வீடுதிகள் கிளப் மற்றும் அரங்குகளில் கேளிக்கை மற்றும் இசை நிகழ்ச்ரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார் இதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வேளாங்கண்ணியில் மட்டும் 300 போலீசார் 6 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு கூட்டுத்திருப்பலி கலந்துகொண்ட ஏராளமான புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.