தமிழக அரசு இன்றைய தினம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,864 ஆகவும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,689 ஆகவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு ICU அறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலையை எப்படி இருக்கிறது என உறவினர்கள் அறிந்து கொள்வதற்காக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் பிரம்மாண்ட திரை வைக்கப்பட்டு அதில் கொரோனா நோயாளியின் உடல்நிலை குறித்த விவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.கொரோனா தொற்றின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அறிகுறி இல்லாத கொரோனா பாதித்தவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெறும் நிலை உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணைநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அவ்வாறு சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறியவும், நோயாளிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் நோயாளிகளின் உறவினர்கள் பலர் அரசு மருத்துவமனைகளின் கொரோனா வார்டுகளுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருப்பது அரசு மருத்துவமனைகளில் பெரும்பிரச்னையாக மாறி உள்ளது.
கொரோனா வார்டுகளுக்கு அருகே சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் கூடுவதால் அப்பகுதியில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறி ஆகி வந்தது. அவ்வப்போது மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் காவலாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படும் நிகழ்வு அரசு மருத்துவமனைகளில் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது.
இப்பிரச்சைக்கு முழுமையான தீர்வு காணும் நிலையில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு ICU வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்த விவரங்களை பிரம்மாண்ட திரையில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இந்த திரையில் சிகிச்சையில் உள்ள கொரோனா தொற்றால் சிகிச்சையில் இருக்கும் நபரின் வார்டு எண், பெயர், வயது, பாலினம் ஆகியவை பதிவிடப்படுகிறது. அதன் அருகில் நோயாளியின் மருத்துவ நிலை என்ற பெயரில் நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளதா அல்லது கவலைக்கிடமா, மிகவும் கவலைக்கிடமா என்ற விவரங்கள் வெளியிடப்படுகிறது.
மருத்துவமனையின் நுழைவு வாயிலிலேயே வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திரை மூலம் இந்த விவரங்கல் வழங்கப்படுவதால் நோயாளிகளின் உறவினர்கள் கூட்டம் கூடாமல் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை குறித்து எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியை தமிழகத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தினால் அரசு மருத்துவமனைகளில் தேவையின்றி மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கலாம்