நெமிலி கிரேன் விபத்தில் 4 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது எனவும் இத்தகைய விபத்துகள் இனி நடக்காமல் தடுக்க நடவடிக்கை தேவை எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே உள்ள நெமிலி வட்டத்தில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள கீழ்வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் கூடிய நிலையில் நேற்று மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதன் ஒருபகுதியாக கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்தும் வைபவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஆர்வமாக மாலை அணிவிக்கும் நிகழ்வுக்காக காத்துக் கொண்டிருக்க எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விபத்துக்குள்ளானது.


இந்த நிலையில் நெமிலி கிரேன் விபத்தில் 4 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது எனவும் இத்தகைய விபத்துகள் இனி நடக்காமல் தடுக்க நடவடிக்கை தேவை எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகில் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில்  4 பக்தர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


4 பேர் பலி


நெமிலியைடுத்த கீழ்வீதியில் உள்ள மண்டியம்மன் கோயிலின் மயிலேறும் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழா நடைமுறைகளின் ஒரு கட்டமாக பக்தர்கள் கிரேனில் தொங்கியபடியே சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கிரேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிரேனில் தொங்கியபடியே வந்த மாணவர் ஜோதிபாபு கீழே விழுந்து உயிரிழந்தார். திருவிழாவில் பங்கேற்றிருந்த  முத்து, பூபாலன், சின்னசாமி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்து, மருத்துவம் பெற்று வருகின்றனர்.




சாலை சரியில்லாததால்தான் கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழாக்களில் எத்தகைய விபத்துக்கும் இடமளிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். விபத்து நடந்த இடத்தில் மருத்துவ வசதிகளோ, அவசர ஊர்தி வசதிகளோ செய்யப்படவில்லை. திருவிழாவுக்கு அனுமதி அளித்த காவல்துறையும், அரசு நிர்வாகமும் கூட இவற்றை உறுதி செய்யவில்லை.


கோயில் திருவிழாக்களில் கட்டாய மருத்துவ வசதி


இனி வரும் காலங்களில் கோயில் திருவிழாக்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். அந்த விதிகள் மீறாமல் இருப்பதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து கோயில் திருவிழாக்களிலும் மருத்துவ வசதிகளும், அவசர ஊர்தி வசதியும் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.


கிரேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் 8 பேருக்கும்  தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த நால்வரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.