2023ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவில் தமிழகம் என்று இடம்பெற்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாடு என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
சர்ச்சையான பேச்சு; பின்னணி என்ன?
கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ”மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது” என கூறினார்.
அதைதொடர்ந்து, நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார். அதோடு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழிலும், தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றது. மேலும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை. ஆளுநரின் இந்த அடுத்தடுத்த செயல்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, தமிழ்நாடு அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனுவை வழங்கியது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஆளுநரிடம் எந்நேரத்திலும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். அப்போது, தன்னிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள், அதனை நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணங்கள் அடங்கிய கோப்புகளையும் ஆளுநர் உடன் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது.
ஆளுநர் விளக்கம்
இந்த நிலையில், தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கான காரணம் குறித்து, ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்” ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில், பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்வில் வரலாற்று பண்பாடு பற்றி பேசும்போது காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்” என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் 74ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆளுநர் மாளிகை குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழைத் தயாரித்துள்ளது.
இதில், தமிழ்நாடு என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் சின்னமும் திருவள்ளுவர் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் ஆளுநர் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு அடிபணிந்தாரா, டெல்லி அவருக்கு ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கியதா என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன.