கொலை நடைபெற்ற சம்பவத்தின் போது, உடனடியாக குற்றவாளி ஒருவரை பிடித்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகளையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


நீதிமன்றத்திற்கு அருகே கொலை சம்பவம்:


திருநெல்வேலி ( நெல்லை )  மாவட்டத்தில் நேற்று மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


நேற்று காலை சுமார் 8 மணியளவில், 24 வயதுடையாக கூறப்படும் மாயாண்டி என்ற இளைஞர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்திருக்கிறார். அப்போது, காரில் இருந்து 6 பேர் கொண்ட கும்பலானது, மாயாண்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. 


இதையடுத்து, காரிலிருந்து இறங்கி மாயாண்டியை துரத்திச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், அவரது ஒரு கை மற்றும் இரு கால்களும் துண்டாகின. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.


6 பேர் கைது :


இதையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஒருவரை கைது செய்தனர். மீதமுள்ள 3 பேர் காரிலிருந்து தப்பித்துச் சென்றனர்.  மேலும், தற்போது தப்பித்துச் சென்ற மூவரும் காவல்துறையிடம் சரணடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 



எதற்காக கொலை?


இந்த கொலை சம்பவமானது, முன்பகை என்றும் சாதிய மோதல் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ராஜாமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை வழக்கில், இன்று கொலை செய்யப்பட்ட மாயாண்டி என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் இன்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டம் தீட்டி ராஜாமணி உறவினர்கள் கொலைசெய்துள்ளனர். 


உயர்நீதிமன்றம் கேள்வி:


இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே , ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு, தாமாக  முன்வந்து சென்னை உயர்நீதிமன்றமானது விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கில் நீதிபதி தெரிவித்ததாவது, “ கொலை சம்பவத்தின்போது, கொலையாளி ஒருவரை பிடித்த சிறப்பு எஸ்.ஐ உய்கொண்டனை பாராட்டுகிறேன். பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடுகிறேன். பணியில் இருக்கும் காவல்துறையினர், பணியைவிட செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர் என்றும் நீதிபதி தெரிவித்தார்.


இதையடுத்து., “ தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடக்கிறது” என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.