காங்கிரஸ் ஆட்சியல் கொண்டு வரப்பட்டாலும் பா.ஜ.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை தமிழ்நாட்டில் தாங்கள் அனுமதிக்கவில்லை எனவும் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவுக்கு மாநில அரசு தயார் செய்த உரையின் பல பத்திகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.
நேற்று, இறந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நடந்தது.
அதில், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் முதலமைச்சராக இருந்த போதும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் தமிழ்நாட்டிற்கு நீட் வரவில்லை. யாருடைய ஆட்சிக் காலத்தில் நீட் நுழைந்தது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றும் கூறினார்.
மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எங்கள் ஆட்சியில் நீட் தேர்வை எதிர்த்து வந்ததாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
மேலும், நீட்டை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும், அதிமுக ஆட்சியிலும் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், அதிமுக அனுப்பிய தீர்மானம் குடியரசுத் தலைவரின் மாளிகையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை சட்டப்பேரவையில் ஏன் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ’நாங்கள் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வை வரவிடவில்லை. இதை புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு விவாதமே தேவையில்லை’ என்று தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரை, மருத்துவ இளங்கலை பட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படிக்கவும் நீட் தேர்வு கட்டாயமாகும். இந்த தேர்வினை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
தேசிய தேர்வு முகமைக்கு முன்னதாக சிபிஎஸ்இ இந்த தேர்வினை நடத்தி வந்தது. நாட்டில் உள்ள 90 ஆயிரம் மருத்துவ சீட்டுகளில் மாணவர்களை நிரப்புவதற்காக அனைத்து ஆண்டுகளிலும் மே மாதம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.