தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெறக்கோரி நேற்று மக்களவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக திமுக எம்பிக்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து ஆளுநரை திரும்பப்பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தநிலையில், நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு விளக்கமளித்துள்ளனர். அதில், கூட்டுறவு சங்க திருத்த மசோதாவைப் பொருத்தவரை விதிகளை மீறி செயல்படுவதாக கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும், விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிட அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கு அதிகாரம் உள்ளதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க திருத்த மசோதா குறித்து ஆட்சேபம் தெரிவித்து ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆனால், இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
அதேபோல் பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவில், பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படும் நபருக்கு கல்வித்தகுதியோ, அனுபவமோ தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அம்சத்திற்கு ஆளுநர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவில் பண மசோதாவோ அல்லது வேறு எந்தவொரு மசோதாவோ அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும் ஆளுநருக்கு அந்த மசோதாவில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் மசோதாவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தபோது, மசோதா தொடர்பான நிலை, சட்டபூர்வ சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளார்.
தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக மக்களவையில் திமுகவினர் குரல் எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆளுநர் அவரது பொறுப்பை தான் கவனித்து வருவதாகவும், திமுகவினரின் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை என்றும் கூறியதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கடந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது முதல் நீட் தேர்வு விலக்கு,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை, மாதவரம் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வரைவு மசோதா, பாரதியார் பல்கலைக் கழகச் சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்