திமுக எம்.பியும், திமுக மகளிர் அணித்தலைவருமான கனிமொழி  பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்தும் , குழந்தைகளுக்கு எதிரியாக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட மக்களவையில் பெண் குழந்தைகளை பொழுதுபோக்கு மற்றும் சினிமா போன்றவற்றில் வரம்பு மீறி நடிக்க வைப்பது குறித்தும் , அதனை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.





முன்னதாக பிரபல யூடியூப் சேனல் ஒன்று , பெண்கள் தினத்தை முன்னிட்டி கனிமொழி அவர்கள் உடனான கலந்துரையாடலை நடத்தியது. அதில் பங்கேற்ற மக்களவை திமுக எம்.பி கனிமொழி பெண்களுக்கான இன்றைய காலக்கட்டம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.


 






அதில் "அந்த காலத்துல பெண்ணியம் பேச பெரியார் போன்ற சிலர்தான் இருந்தாங்க. ஆனால் இன்றைக்கு பெண்களே பெண்களுக்கான உரிமைகளை பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். ஒரு ஆண் பெண்களுக்கான உரிமைகளை பேச அவசியம் இல்லை. பேசினாலும், யாரும் தடுக்க போவதில்லை.அவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.50 வருடங்களுக்கு முன்பாக இருந்த சூழல் இன்று இல்லை. ஆனால் பெண்கள் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு. சம்பளமே இங்க சமமாக இல்லை.  ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் உயர் கல்விக்கு போறாங்க. ஆனால் 23 சதவிகிதம்தான்  வேலைக்கு போறாங்க. அதை எப்போ சரி செய்ய போறோம் என்பதுதான் கேள்வி. சட்டமே பெண்களை சமமாக மதிப்பது கிடையாது.திருமணத்திற்கு பிறகு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் , அதனை ஏற்றுக்கொள்ளாதா அரசாங்கமாகத்தானே இருக்கிறது.


பெண் பிறப்பதற்கு முன்னதாகவே எந்த பாதுகாப்பும் இல்லை. பெண்ணாக இருப்பதனாலேயே இந்த  மாதிரியான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது சரியில்லை. அந்த நிலை மாறும் வரையில் , பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என பேசுவதில் அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு குடும்பத்திலும் பெண் குழந்தைகளையும் , ஆண் குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் , அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்கள் சாமியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் அவள்தான் தீர்மானிக்க வேண்டும்” என கனிமொழி பெண்ணியம் குறித்தான தனது பார்வை குறித்து விளக்கியிருக்கிறார்.