மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்தவர்களே பெரும்பாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பெரும்பாலானோர் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


நீட் தேர்வு:


இந்த ஆய்வின் மூலம் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு என்பது மிகவும் கடினமானதாக இருப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


“தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு 2011-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு அடித்தளமிட்டபோதே அதனை கடுமையாக எதிர்த்தவர் அம்மா. இதற்குக் காரணம், நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்பதுதான். கிராமப்புற மாணவ மாணவியர், ஏழையெளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவ மாணவியர், சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் என கிட்டத்தட்ட 75 விழுக்காடு மாணவ மாணவியர், நகர்ப்புற மாணவ மாணவியருடன் இணைந்து நீட் தேர்வினை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை இந்தியா முழுவதும் நிலவுகிறது.


இதற்குக் காரணம் கிராமப்புறங்களில் நீட் தேர்வினை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சி மையங்கள் இல்லாததும், நகர்ப்புறங்களில் உள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிலும் அளவுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு பண வசதி இல்லாததும், மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பாடத் திட்டங்கள் நீட் தேர்விற்கான பாடத் திட்டங்களுடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளதும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.


மருத்துவ கனவு சிதைப்பு:


சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கிராமப்புறங்களில் பயிலும் 75 விழுக்காடு மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை சிதைக்கும் முயற்சிதான் நீட் தேர்வு என்பது. இதனால்தான், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமென்று அம்மா குரல் கொடுத்து வந்தார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அம்மாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இருப்பினும், நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வினால் பயன் பெறுபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே என்பது அண்மையில் தனியார் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 50 மாணவ மாணவியரில், 38 மாணவ மாணவியர் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும், இதில் 37 மாணவ மாணவியர் நீட் தேர்விற்காக பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்ததாகவம், ஒருவரை தவிர மற்ற அனைவரும் முதல் முறை வெற்றி வெற்றி பெற்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் மத்திய அரசு பாடத் திட்டத்தின்கீழ் பயின்றுள்ளனர் என்பதும், நீட் தேர்வில் செயற்றி பெற எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, பெரும்பாலானோர் NCERT பாடத் திட்டத்தை படித்தாலே நினைத்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று தெரிவித்ததாகவும் ஆங்கில நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நகர்ப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளி நாடுகளில் சென்று மேற்படிப்பு பயிலவும், நகர்ப்புறங்களிலேயே பணிபுரியவும்தான் விரும்புகின்றனர். அதே சமயத்தில் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயின்றால், கிராமப்புறங்களுக்கான மருத்துவச் சேவை பூர்த்தி செய்யப்படும்.


ரத்து செய்ய வேண்டும்:


எனவே, கிராமப்புறங்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தி.மு.க. அரசு கொடுக்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


அன்புமணி எதிர்ப்பு:


மேலும், இந்த ஆய்வு தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது, “நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 50 மாணவர்களில் 39 மாணவர்களின் விவரங்களை திரட்டி தனியார் நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது. 39 மாணவர்களில் 38 பேர் நீட் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் படித்தவர்கள். 29 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதி மாணவர்கள்.


அனைவருமே நகரப் பகுதிகளைச் சேர்ந்த, பொருளாதார அடிப்படையில் வலிமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதிலிருந்தே, நீட் தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் படிக்கும், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது என்பதை உணர முடியும்”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.