வாடகைத்தாய்(Surrogacy) முறை சட்டப்பூர்வமா? 5 ஆண்டு திருமண உறவு விதியை மீறினார்களா நயன் - விக்கி? தண்டனை என்ன?


திரைப் பிரபலங்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன்(Nayanthara - Vignesh Shivan) ஆகிய இருவரின் திருமணம் ஜூன் 9ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்கு ஒட்டுமொத்த சினிமா உலகமும் பொதுமக்களும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து உலக நாடுகளுக்கு தம்பதியினர் ஹனிமூன் சென்று வந்த வண்ணம் உள்ளனர். 


இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிகழ்ச்சியைப் புத்தாக்க முறையில் இயக்கி, விக்கி அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து பல்வேறு படங்களில் இருவரும் தனித்தனியாக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில் திருமணமாகி சரியாக 4 மாதங்கள் கழித்து நேற்று (அக்டோபர் 9ஆம் தேதி), ’நானும் நயனும் அப்பா - அம்மாவாகி உள்ளோம்’ என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ’’எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எங்களின் பிரார்த்தனைகளும் முன்னோர்களின் ஆசிகளும் அதை சாத்தியப்படுத்தி உள்ளன’’ என்றும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். 


திருமணமாகி 4 மாதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு நயன் தாயானது எப்படி? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாடகைத் தாய் மூலமாகவோ தத்தெடுப்பு மூலமாகவோ நயன்தாரா, தன் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 




வாடகைத் தாய் முறை என்றால் என்ன?


குழந்தை பெற முடியாத தம்பதியினர், தங்களின் விந்தணு மற்றும் கருமுட்டையை எடுத்து வாடகைத் தாயின் வயிற்றுக்குள் செலுத்தி, குழந்தை பெறுவதே வாடகைத் தாய் முறையாகும். கொடையாளர்களின் விந்தணு, கருமுட்டைகளைக் கொண்டும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறப்படுகிறது. இதில் வாடகைத் தாய்களின் கருமுட்டை மூலம் குழந்தை பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.


வாடகைத் தாய் முறைக்கு தடையா?


இந்தியாவில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுவிட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார். திருமணத்துக்கு முன்பே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியுமா, இது சட்டப்பூர்வமான நடைமுறையா? யாரெல்லாம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறலாம்? என்று பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விரிவாகவே பார்க்கலாம். 


முன்பெல்லாம் இந்திய வாடகைத் தாய்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பும் தேவையும் அதிகமாக இருந்தது. ஆரோக்கியமான, மது, புகை உள்ளிட்ட பழக்கங்கள் இல்லாத தாய் மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான செலவு உள்ளிட்ட காரணங்களால் வெளிநாட்டுத் தம்பதிகளும் ஒருபால் ஈர்ப்பாளர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் அதிக அளவில் குழந்தை பெற்றுக் கொண்டனர்.


எனினும் இதில் வாடகைத் தாயின் உயிருக்கு ஆபத்து, குழந்தையின் உடல் உறுப்புகள் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால், பணத்துக்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறைக்கு மத்திய அரசு தடை விதித்தது. 


2022-ல் அமலுக்கு வந்த வாடகைத் தாய் சட்டம்


வாடகைத் தாய் மசோதா, மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர், 2020 பிப்ரவரி 5ஆம் தேதி நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2021 குளிர்காலக் கூட்டத்தொடரில் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்டு, ஜனவரி 2022-ல் அமலுக்கு வந்தது. 
 
வாடகைத் தாய் சட்டம் என்ன சொல்கிறது?


பணத்துக்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. குழந்தைகளைப் பணத்துக்காகவும் இன்ன பிற வருமானங்களுக்காகவும் விற்கவோ, பாலியல் தொழில் உள்ளிட்டவற்றுக்கோ அனுமதிக்கக்கூடாது. 


மனிதாபிமான உதவியின் அடிப்படையில்  (altruistic purposes) குழந்தை பெற்றுக் கொடுக்கலாம்.




என்ன விதிமுறைகள்?


* கணவனுக்கோ, மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ மலட்டுத்தன்மை (குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழல்) நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
* குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.  
* கணவனின் வயது 26 முதல் 55 ஆண்டுகள் வரை இருக்கலாம். 
* மனைவிக்கு 25 முதல் 50 ஆண்டுகள் வரை வயது இருக்க வேண்டும். 
* சம்பந்தப்பட்ட தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தை (வழக்கமான, தத்தெடுத்த அல்லது வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த) இருக்கக் கூடாது.


* மனநலம் அல்லது உடல்நல பாதிப்போடு, உயிருக்குப் போராடும் குழந்தைகளைக் கொண்டிருப்போருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. 


குழந்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?


* தம்பதிகள் தங்களுக்கு மலட்டுத் தன்மை உள்ளதாக, தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயம்.


* அது, மாவட்ட மருத்துவ வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாக இருக்க வேண்டும். அல்லது நீதிமன்ற உத்தரவு இருக்க வேண்டும். 
* வாடகைத் தாய்க்கு 36 மாதங்களுக்கு (3 ஆண்டுகள்) மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு, உடல் மற்றும் மன ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக,அந்தக் காப்பீடு இருக்க வேண்டும். 




யாரால் வாடகைத் தாயாக இருக்க முடியும்?
* தம்பதிகளின் நெருங்கிய சொந்தமாக வாடகைத் தாய் இருக்க வேண்டும்.  
* வாடகைத் தாய்க்கு ஏற்கெனவே திருமணமாகி இருக்க வேண்டும். 
* 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 
* வாடகைத் தாய்க்குக் குறைந்தது 3 வயதில் சொந்தமாகக் குழந்தை இருக்க வேண்டும். 


* வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அவரால் வாடகைத் தாயாக இருக்கமுடியும்.
* மருத்துவ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தகுதி வாய்ந்தவராக உள்ள சான்றிதழையும் வாடகைத் தாய் வைத்திருக்க வேண்டும். 


வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் முறையைக் கண்காணிக்கும் பொறுப்பு யாருடையது?


மத்திய, மாநில அரசுகள் முறையே தேசிய மற்றும் மாநில அளவில் வாடகைத் தாய் கண்காணிப்பு வாரியத்தை, வாடகைத் தாய் சட்டம் அமலான 90 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்த வாரியம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் மருத்துவமனைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கும். 


என்ன தண்டனை?


இந்த சட்டத்தின்படி,


* கரு முட்டைகளை விற்பது,


* வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையைத் துன்புறுத்துவது, கைவிட்டுவது,


* பணத்துக்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது உள்ளிட்டவை சட்டப்படி குற்றமாகும். 


இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். 
ரூ.10 லட்சம் வரை அபராதம் அளிக்கப்படும். 




ஏஆர்டி சட்டம் சொல்வது என்ன? (Assisted Reproductive Technology -ART Act)


மனித உடலுக்கு வெளியே விந்தணு அல்லது முட்டையைப் பராமரித்து, கருமுட்டையை பெண்ணின் இனப்பெருக்க பாதைக்குள் செலுத்தப் பயன்படுத்தும் தொழில்நுட்பமே ஏஆர்டி ஆகும். இதில் விந்தணு தானம், ஐவிஎஃப், கர்ப்பகால வாடகைத் தாய் முறை ஆகியவை அடக்கம். 


இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளை உருவாக்கும் மருத்துவமனைகள் சரியாக விதிகளின்படி செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவே ஏஆர்டி சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும் ஜனவரி 2022-ல் அமலுக்கு வந்தது. 


என்ன தண்டனை?


* ஏஆர்டி மூலம் பிறக்கும் குழந்தையைக் கைவிடுவதோ, துன்புறுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். 
* கருமுட்டைகளை விற்பதோ வணிகத்துக்குப் பயன்படுத்துவதோ குற்றமாகும். (ஈரோடு தனியார் மருத்துவமனையில் அண்மையில் கருமுட்டை விற்பனை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
* முதல் முறையாக எனில் ரூ. 5 முதல் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 
* அடுத்தடுத்த முறை எனில், ரூ.10 முதல் ரூ.20 லட்சம் அபராதமும், 8 முதல் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.  


இந்த நிலையில் திருமணத்துக்குப் பிறகு 4 மாதங்களில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த நயன் - விக்கி தம்பதி விதிமுறைகளை மீறினார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அவர்களே உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.