டாக்டர் கெளசிக் சமீபத்தில் ஒரு வீடியோ மூலம் வைரலானார். அதில் தடுப்பூசிக்கு பயந்து சென்ற அந்த விவசாயி, தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், தற்போது நலமோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் நாம் தொலைபேசியை எடுத்து ஒரு நம்பரை டயல் செய்தால் போதும் மறுமுனையில் ஒரு ரெக்கார்ட் செய்யப்பட்ட குரல், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் எனப் பேசும். பல நேரம் அது இந்தியிலோ, ஆங்கிலத்திலோ இருக்கும். அப்படியே நமக்குப் புரிந்தாலும் கூட அதை நாம் கவனிக்காமல் இருப்போம். அப்படி இருக்கையில், மருத்துவர் ஒருவர் தடுப்பூசிக்காக கூறிய வார்த்தைகள் சமீபத்தில் வைரலாகியது.
மொத்தமே 29 விநாடிகள் ஓடிய அந்த வீடியோ தடுப்பூசி குறித்தும் மருத்துவர்களின் அக்கறை குறித்தும்
எடுத்துக் கூறியது. அன்று வைரலான வீடியோவில், திருப்பத்தூர் மாவட்ட நாட்ராம்பள்ளி பஞ்சாத்தைச் சேர்ந்த டாக்டர் கெளசிக், ஆடு மேய்க்கும் நபரிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சொல்கிறார். அந்த நபரோ எனக்கு அந்த ஊசி மேல எல்லாம் பயமில்லீங்க. ஆனா அதப்போட்டா கை, கால் வலி வருமே. அப்புறம் யாரு இந்த ஆடு, மாட மேய்க்குறது எனக் கேட்பார். இன்னிக்கு நான் ஊசி போட்டுக்குறேன்.
நாளைக்கு நீங்க மேய்ப்பீங்களா எனக் கேட்க, அப்போது மருத்துவர் குறுக்கிட்டு ஆடு மேய்க்கணும் தானே. நாளைக்கு நான் பார்த்துக்குறேன். நீங்க இன்னிக்கு ஊசி போடுங்க எனக் கூறுகிறார். மருத்துவரின் அருகில் இருக்கும் சுகாதாரப் பணியாளர். ஏப்பா, உன் மனைவிக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினாரு நம்ம டாக்டர் என நன்றிக்கடனை நினைவூட்டுகிறார். ஆனால், அந்த நபரோ எதற்கு மசிவதாக இல்லை. அவர் அந்த இடத்திலிருந்து நகர்கிறார்.
அதற்கு பின் அந்த விவசாயி தடுப்பூசி போட்டுக்கொண்டாரா, டாக்டரின் அறிவுரை வீணானதா போன்ற பல கேள்விகள் சோஷியல் மீடியாவில் வைரலானது. அதற்கு டாக்டர் கெளசிக் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த விவசாயியோடு செல்ஃபி வீடியோ எடுத்த டாக்டர், தடுப்பூசி குறித்து விவசாயிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு சிரித்தபடியே பதில் அளிக்கும் விவசாயி, அப்போது தடுப்பூசிக்கு பயந்தேன். ஆனால் இப்போது தடுப்பூசி போட்டு நலமாக இருக்கிறேன். அதனால் அனைவருமே தடுப்பூசி போட வேண்டும் என்கிறார்.