எக்காலத்தில் கேட்டாலும் குலைநடுங்கச் செய்யும் வகையில் அரங்கேற்றப்பட்டுள்ள, நாங்குநேரி கொடூர தாக்குதல் சம்பவம் பிஞ்சுகளின் மனதில் சாதிய தீ எப்படி நஞ்சாய் கலந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


நாளைய விடியல் நமக்கானதாய் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தனது குழந்தைகளுக்கான உணவை கையில் ஏந்தி வந்த ஒரு தாயின் வீட்டில் இருந்து, அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையாக உள்ள இரு குழந்தைகளின் ரத்தம் ஆறாய் வழிந்தோடிய சம்பவத்தின் காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களையும், ஊடகங்களையும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. மனதை ரணமாக்கி, கண்களை குளமாக்கும் இந்த சம்பவம் சாதிய ஆணவத்தால்  நடந்து இருப்பது  எங்கோ வடநாட்டில் ஒரு மூலையில் எல்லாம் இல்லை.


சமத்துவம் பேசி நாட்டிற்கு முன்மாதிரி என மார்தட்டிக்கொண்டு, பெரியார் மண் என அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்நாட்டில்தான்


நாங்குநேரி கொடூரம்:


நாங்குநேரியில் வசித்துவரும் பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் அம்பிகாபதி.  அவருக்கு பதினேழு வயதில் மகனும், பதிமூன்று வயதில்  மகளும் உள்ளனர்.  வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலை பள்ளியில்  12-ஆம் வகுப்பு படித்து வந்த அம்பிகாபதியின் மகன், வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களால் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பாக பள்ளியில் புகாரளித்த நிலையில், 3 பேர் கொண்ட கும்பல் அம்பிகாபதியின் வீட்டுக்குள் நுழைந்து அவரது மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. மேலும், அம்பிகாபதி சார்ந்துள்ள சமூகத்தை இழிவுபடுத்தியவாறு பேசிக்கொண்டே, அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 



தடுக்க முயன்ற அம்பிகாபதியின் மகளையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே வெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களே என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.


பற்றி எரியும் சா”தீ”..


நாளைய தலைமுறை ஒட்டுமொத்த இந்தியாவை உலகளவில் தலைநிமிரச் செய்யும் என பல தலைவர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால், ஒன்றுக்கும் உதவாத சாதியை தூக்கிப்பிடித்துக் கொண்டு பள்ளிப்பருவத்திலேயே, கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது நாளைய தலைமுறை. பதின் பருவம் கூட கடக்காத நிலையிலேயே,  இந்த மாணவர்கள் செய்த சம்பவம் அவர்கள் என்ன மாதிரியான வாழ்வியலையும், குடும்ப சூழலையும் தினசரி சந்தித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது.


வீடுகளில் விதைக்கப்படும் நஞ்சு:


ஒரு மனிதனின் செயல்பாடுகள் எப்படிப்பட்டது என்பது உண்மையில் அவரது குடும்ப சூழலையே சார்ந்தது.  ஒரு குடும்பத்தில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களையும், பண்புகளையும்தான், அந்த வீட்டில் பிறந்து வளரும் குழந்தையும் கிரகித்துக் கொண்டு தனக்கான வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிடுகிறது. அப்படி இருக்கையில், தங்களுக்கு எதிராக எப்படி பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவன் புகாரளிக்கலாம் என்ற ஆத்திரத்தில்,  பள்ளிப்பருவத்திலேயே கொலை செய்யும் அளவிற்கு இந்த மாணவர்கள் சென்றுள்ளனர். இது அந்த மாணவர்களின் குடும்பம் சாதியையும் அதன் பெருமைகளையும் எப்படிபட்ட பிம்பத்துடன் கொண்டாடி இருப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.


தூக்கிவிடும் சமூக வலைதளங்கள்:


வீட்டை தொடர்ந்து தற்போதைய சூழலில் ஒரு மனிதன் அதிகம் நேரம் செலவிடுவது சமூக வலைதளங்களில்தான். ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு குடையின் கீழ் இணைக்கும் தொழில்நுட்பம் என பிரமிப்பாக பார்க்கப்பட்ட சமூக வலைதளம் தான், இன்று பிரிவினைக்கான முக்கிய காரணியாக உள்ளது. சாதி, மதம், மொழி போன்றவற்றை கொண்டு மனித இனமே பல்வேறு குழுக்களாக பிரிந்து, கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் வெளியான மாமன்னன் படத்தில் இடம்பெற்று இருந்த, பட்டியலின உரிமைக்கு எதிரான ரத்தினவேலு கதாபாத்திரம் எப்படி கொண்டாடப்பட்டது என்பது அனைவருமே அறிந்ததே.


இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்வதாக சிலர் சப்பைக் கட்டு கட்டுகின்றனர். ஆனால், உண்மை தன்மையை அறிந்த யாரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


பெரியார் மண்:


தமிழ்நாடு அல்லாத வேறு எந்த மாநிலங்களில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்தாலும், நல்ல வேளை நாம் பெரியார் பிறந்த மண்ணில் நாம் பிறந்தோம். இங்கு சாதிய வேறுபாடுகள் எல்லாம் இல்லை, ஏற்றத்தாழ்வுகள் கலையப்பட்டு சமத்துவம் போற்றப்படுகிறது. மற்ற மாநில மக்களை போன்று பெயருக்கு பின்னால் இங்கு யாரும் சாதியின் பெயர்களை சேர்த்துக் கொள்வதில்லை என பக்கம் பக்கமாக பெருமை பேசுகிறோம். ஆனால் அதையும் தாண்டிய கடினமான உண்மை என்னவென்றால், பெயர்களுக்கு பின்னால் இருந்து சாதியை நீக்கிய அளவிற்கு எளிதல்ல மக்களின் மனதில் இருந்து சாதியை நீக்குவது.


அதன் காரணமாகவே நாட்டிற்கே முன்னோடி மாநிலம் என மார்தட்டிக் கொண்டு இருந்தாலும், இன்றளவும் பல ஆணவக் கொலைகளும், சாதிய பெருமைக்கான கொலைகளும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகின்றன. இதில் கிராமம், நகரம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. அனைத்து மட்டங்களிலும் இந்த சாதிய வேறுபாடு நீடித்துக் கொண்டே தான் உள்ளது.


விளையாடும் அரசியல்:


இந்த சாதிய ஆணவக் கொலைகளுக்கு பல நேரம் துணைபோவது சாதி கும்பல் அரசியலும், மாநில அரசு எடுக்காத துரித நடவடிக்கைகளும் தான் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தமிழ்நாட்டில் நடந்த எத்தனையோ ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகள் இன்றளவும், வாய்தா மேல் வாய்தா வாங்கி குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் உள்ளனர். வேங்கைவயல் சம்பவம் நிகழ்ந்து பல மாதங்கள் உருண்டோடியும் இதுவரை ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படாத நிலைதான் உள்ளது. பல குற்றவாளிகள் தப்பிக்க அரசு இயந்திரமே உதவுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது நாங்குநேரி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முக்கிய குற்றவாளிகளின் குடும்பத்தினர் கூட, ஆளும் அரசுக் கூட்டணியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள்தான். 


”படி”ங்க..


சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பல படங்களில், இந்த ஏற்றத்தாழ்வுகள் களைந்து எடுக்கப்பட வேண்டுமானால் படிப்பு ஒன்று மட்டுமே தீர்வு என அறிவுறுத்தப்பட்டு இருக்கும். காரணம் கல்வி மட்டுமே எந்தவொரு நிகழ்வையும் பகுத்தறிந்து செயல்பட உதவும். அதன் மூலம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தி, நாளைய தலைமுறையினரிடமிருந்து சாதி எனும் பேராபத்தை முற்றிலுமாக நீக்கலாம் என நம்புகின்றனர்.  ஆனால், அந்த கல்வி நிலையங்களிலேயே இப்படி சாதிய ஏற்றத்தாழ்வுகள் தழைத்தோங்குவது எதிர்கால சமூகம் என்ன மாதிரியாக உருவாகப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை  மாற்ற தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைக் காண பொறுத்திருப்போம்.