நம்ம ஊரு திருவிழா 2023


கலை பண்பாட்டுத்துறை தொடர்பாகத் தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை ஒட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகிறது. 


நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொது மக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்துகொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு  மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும் வகையில்  பிரம்மாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்பட உள்ளது.


இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது  பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத் துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். 


முதலமைச்சர் அழைப்பு


இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் சொல்லியிருப்பதாவது, ”தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றொடு முன்னெடுப்பு  தான்  சென்னை சங்கமம். தமிழ் பண்பாட்டு சூடரை ஏற்றி வைத்தவர் தமிழினத் தலைவர் கருணாநிதி. அவர் ஏற்றி வைத்த இந்த தமிழ் பண்பாட்டு சூடர் தான் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா. 16 இடங்கள், 60க்கும் மேற்பட்டட கலை நிகழ்ச்சிகள், 600க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்கள் பங்குபெரும் சென்னை சங்கமம்.






தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் பல இடங்ளில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அரசு சார்பில் நடைபெற இருக்கிறது.  வரும் வெள்ளிக் கிழமையன்று சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா தொடங்க உள்ளது.  பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா, உணவுத் திருவிழா என அனைத்தும் இடம்பெறுகின்றன. உலகமே வியந்து பார்க்கும் ’நம்ம ஊரு திருவிழா’வுக்கு அனைவரும் வாருங்கள்...சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.