காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா(Thirumahan Evera) இன்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.


ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா பதவி வகித்து வந்தார். மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் ஈரோட்டில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் திருமகன் ஈவெரா அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். 





2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு, திருமகன் ஈவெரா எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றார். இன்னும் சிறிது நேரத்தில் அவரின் உடல் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. 


யார் இந்த திருமகன் ஈவெரா?


ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெராவின் இயற்பெயர் ராம் ஆகும். இவர் தந்தை ஈவிகேஸ் இளங்கோவன், பெரியார் ஈ.வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத்தின் பேரனும் ஆவார். திருமகன் ஈவெராவுக்கு சஞ்சய் என்ற மூத்த சகோதரர் உள்ளார்.


திருமகன் ஈவெரா தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் ஆவார். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராகவும் திருமகன் ஈவெரா இருந்துள்ளார்.


முதல்வர் இரங்கல்


திருமகன் ஈவெராவின் திடீர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 


முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’’ஈரோடு கிழக்கு சட்டமன்றத்‌ தொகுதி உறுப்பினர்‌ ஈ.வெரா. திருமகன்‌ மறைந்துவிட்டார்‌ என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும்‌ ஆற்றொணாத்‌ துயரும்‌ அடைந்தேன்.‌


ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப்‌ போட்டியில்‌ இந்திய அளவில்‌ முதலிடம்‌ பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன்‌ அழைத்துக்கொண்டு வந்து என்னிடம்‌ வாழ்த்து பெற்றுச்‌ சென்ற தம்பி திருமகனின்‌ உற்சாகம்‌ ததும்பும்‌ முகம்‌ மனதில்‌ நீங்காமல்‌ நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர்‌ அண்ணன்‌ இளங்கோவனை எப்படித் தேற்றுவது எனத்‌ தெரியாமல்‌ தவிக்கிறேன்‌.


ஈ.வெ.ரா. திருமகன்‌ மறைவால்‌ துயரில்‌ ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர்‌, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியினர்‌, ஈரோடு மக்கள்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ கனத்த இதயத்துடன்‌ எனது ஆழ்ந்த இரங்கல்களைத்‌ தெரிவித்துக்‌கொள்கிறேன்’’‌ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் இரங்கல்


காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’’திருமகன்‌ ஈவெரா உடல்நலக் குறைவால்‌ காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும்‌, துயரமும்‌ அடைந்தேன். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ்‌ பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்‌. அவரை இழந்து வாடும்‌ அவரது தந்தையார்‌  ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கும்‌, அவரது குடும்பத்தினருக்கும்‌, காங்கிரஸ்‌ கட்சி நண்பர்களுக்கும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ சார்பாக கனத்த இதயத்துடன்‌ அனுதாபத்தையும்‌, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.