பரோலில் இருந்தது சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க மிகப் பெரிய உதவியாக இருந்தது என்று விடுதலையான நளினி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 


6 பேர் விடுதலை : 


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, சாந்தன் உள்பட 6 பேரையும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது.  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தது தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.  28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


உச்சநீதிமன்றத்தில் உத்தரவு நகல் இன்று வெளியான நிலையில், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். சாந்தன் மற்றும் முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்தனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்தனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய மூன்று பேரும் பாதுகாப்பு காரணம் கருதி இன்று இரவு திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பிய நளினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


பரோல் பெரும் உதவி


சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்கு தெரிய வராது. இங்கு இருப்பவர்களைப் போன்று அங்கே படித்தவர்கள் அதிகம் பேர் கிடையாது. பெரிய பெரிய விஷயங்களை புரிந்து கொள்பவர்கள் யாரும் அங்கே கிடையாது.  எனக்கு தகவல்களே கிடைக்காது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், எனக்கு பரோல் கிடைத்து இருந்தது பெரும் உதவியாக இருந்தது. 


உச்சநீதிமன்றத்தை எப்படி அணுக வேண்டும் என்பதெல்லாம் அறிந்து கொண்டோம். எங்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட ரவிச்சந்திரனும் என்னுடன் இணைந்து கொண்டார். அவர் முதலில் என்னை சட்டப்போராட்டத்தில் சேர்த்து கொள்ள மறுத்தார். உனக்கு தான் உறவினர்கள் இருக்கிறார்களே, கணவர், தம்பி மற்றும் வழக்கறிஞர் இருக்கிறாரே என்றார். நாம் சேர்ந்தே உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று பின்னர் முடிவு செய்தோம் என்றார் நளினி. அவருடன் அவரது உறவினர்கள் உடனிருந்தனர். சிறையில் இருந்த அனுபவத்தையும் செய்தியாளர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.


RajivGandhi Case : உச்சநீதிமன்ற தீர்ப்பு : சிறையில் இருந்து நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை


அப்போது அவர் கூறுகையில், "சிறையில் அழகுக் கலை பயிற்சி, தையற்கலை ஆகிய சான்றிதழ் படிப்புகளை படித்தேன். ஆனால், சான்றிதழ் கூட கிடைக்கவில்லை. அங்கே ஒத்துழைப்பு இல்லை. மத்திய அரசுக்கு அனைத்து வகையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிறையில் யாருடனும் சேர மாட்டேன். பிறருக்கு உதவி தேவைப்பட்டால் செய்வேன். எனக்கு ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உண்டு. யோகா செய்வேன்" என்று கூறிக்கொண்டே அம்மா மோட்டர் ஆஃப் பண்ணுங்களேன் ப்ளீஸ் என்று கூறிவிட்டு புன்னகைத்தார் நளினி.


உடனடியாக, செய்தியாளர்களில் ஒருவர்  நீங்கள் குடும்பத் தலைவியாகவே மாறிவிட்டீர்கள் என்ற கூற அதற்கு அவரும், அவரைச் சுற்றி இருந்தவர்கள் ஆமோதிக்கும் வகையில் புன்னகை செய்தனர். முன்னதாக, தனக்கு ஆதரவாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.