தமிழ்நாடு டைப்ரைட்டிங் - சுருக்கெழுத்து கணினி பயிற்சி மைய சங்கத் தலைவர் சோம.சேகர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூலம் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் நடக்கிறது. இளநிலை, முதுநிலை என்ற இரு நிலைகளில் இத்தேர்வுகள் நடக்கின்றது ஒவ்வொரு தேர்வும் இரு நிலைகளில் நடத்தப்படுகிறது. ஒன்றாவது தாள் வேகத்தின் அடிப்படையிலும், இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கை அடிப்படையில் இருக்கும்.


இந்த நடைமுறைப்படியே பல ஆண்டுகளாக டைப்ரைட்டிங் தேர்வு நடக்கிறது. தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்துள்ளனர். இரண்டாவது தாளை முதலாவதாகவும், முதலாவது தாளை இரண்டாவதாகவும் மாற்றி உள்ளனர். வேகமாக டைப்பிங் செய்வதை இரண்டாவதாக மாற்றி உள்ளதால் தேர்வர்கள் மனதளவில் பெரிதும் பாதிப்பர். மார்ச் 26 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. திடீரென மாற்றியுள்ளதால் தேர்வர்களின் திறன் பாதிக்கும். எனவே, இந்த தேர்வை முந்தைய நடைமுறையை பின்பற்றி நடத்த வேண்டுமென்று உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் கோரிக்கை குறித்து தொழில்நுட்ப கல்வி தேர்வுகள் வாரிய தலைவர் மார்ச் 25க்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.






 

நிதிமோசடி செய்த தம்பதி மீதான வழக்கில் முகாந்திரம் உள்ளது - வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவில் மதுரை உயர்நீதிமன்றம் கருத்து 

 

நாகர்கோவிலில் கடந்த 1997 முதல் ராசி பேங்கர்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கியது. டெபாசிட்டுக்கு 24 சதவீதம் வரை வட்டி தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போபாலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில், 5.71 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த சைமன் அலெக்ஸ், அவரது மனைவி சாந்தா ஆகியோர்  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தனர்.

 

இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். அரசுத் தரப்பில், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்து ராஜினாமா செய்துள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகே சரணடைந்தனர். நிதி நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் மனுதாரர்களுக்கு பங்கு உள்ளது என்றார். இதை அடுத்து நீதிபதி, மனுதாரர்கள் மீதான குற்றசாட்டிற்கு போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.