இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சில மணி நேர பயண தொலைவிலே இலங்கை அமைந்துள்ளது. ஆனால், இரு நாடுகள் இடையே இதுவரை வான்வழி போக்குவரத்து தவிர கடல் வழி பயணிகள் போக்குவரத்து இல்லாமல் இருந்து வருகிறது.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.


சிவகங்கை கப்பல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் அதிநவீன வசதிகளுடன் இலங்கைக்கு பயணிக்க உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்படும் இந்த கப்பல் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு செல்கிறது.


என்னென்ன வசதிகள்?


இலங்கைக்கு செல்லும் இந்த சிவகங்கை கப்பலில் மொத்தம் 150 இருக்கைகள் உள்ளது. இதில் 123 இருக்கைகள் சாதா வகுப்பு இருக்கைகள் ஆகும். 27 இருக்கைகள் சொகுசு இருக்கைகள் ஆகும்.


இந்த கப்பலில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தண்ணீர், உணவு, அவசர உதவிக்கான மருந்துகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகளும் போதியளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


காலை உணவாக இட்லி, பொங்கல் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இட்லி, பொங்கல் தேவைப்படும் பயணிகள் முன்கூட்டியே இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


பயணிகளுக்கு தேநீர், காஃபி, சிற்றுண்டிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உயிர்காக்கும் லைஃப் ஜாக்கெட் ஒவ்வொரு பயணிக்கும் வழங்கப்படுகிறது.


எப்போது புறப்படும்?


இலங்கையின் காங்கேசன் துறைமுகம் நோக்கிச் செல்லும் இந்த கப்பல் 16ம் தேதியான நாளை மறுநாள் காலை 10 மணிக்கு புறப்படுகிறது. 4 மணி நேர பயணத்திற்கு பிறகு மதியம் 2 மணிக்கு காங்கேசன் சென்றடையும். அன்று மீண்டும் திரும்பி வரும் சேவை கிடையாது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு இலங்கையின் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 2 மணிக்கு வந்து சேர்கிறது.


18ம் தேதியில் இருந்து இந்த கப்பல் சேவை இலங்கை சென்று மீண்டும் தமிழ்நாடு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதியில் இருந்து காலை 8 மணிக்கு எடுத்து மதியம் 12 மணிக்கு காங்கேசன் செல்கிறது.


காங்கேசன் துறைமுகத்தில் 2 மணிக்கு எடுத்து மாலை 6 மணிக்கு மீண்டும் நாகப்பட்டினம் வந்தடையும். வாரத்தில் 7 நாட்களும் இந்த கப்பல் சேவை இயக்கப்படும். வானிலை ஏதேனும் அசாதாரண சூழல் நிலவினால் மட்டுமே இந்த சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து வானிலை நிலவரத்தை கண்காணிப்பார்கள். இதற்கான கட்டணம் ரூபாய் 5 ஆயிரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


விமான நிலையத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் இந்த பயணத்திலும் கடைபிடிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செரியபாணி என்ற கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், போதியளவு பயணிகள் வராத காரணத்தால் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.