நாகை மீனவர்களின் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் படகில் இருந்த 10 மீனவர்கள் மீதும் காங்கேசன் துறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த மதி, ராஜேஷ் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் மீனவர்கள் படகை சுற்றி வளைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இலங்கை கடற்படை கப்பலில் இருந்த வீரர் ரத்நாயக்க கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரை மீட்ட கடற்படையினர் காங்கேசன் துறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரத்நாயக்க உயிரிழந்தார். இதனை அடுத்து நாகை மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை படகையும் பறிமுதல் செய்தது. இலங்கை கடற்படையினர் அளித்த புகாரின் பேரில் நாகை மீனவர்கள் 10 பேரின் மீதும் காங்கேஷன் துறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.