நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.,யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினருமான செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். 


நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த ஜனவரி மாதம் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட செல்வராஜ் அதற்கான தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இப்படியான நிலையில் தான் நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. 67 வயதான செல்வராஜ் 1989,1996,1998,2019 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யாக இருந்துள்ளார். கடந்த மாதம் மக்களவை தேர்தல்ட் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக போராடியவர் மறைந்த எம்.பி., செல்வராஜ் எனவும், காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் நீதிமன்றம் அமைக்கக்கோரி 110 கி.மீ  மனித சங்கிலி நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்” என புகழாரம் சூட்டியுள்ளார். செல்வராஜ் இறுதிச்சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் தொடர் சிகிச்சையிலும் கட்சி பொறுப்பு,மக்கள் பிரதிநிதியாக தொகுதியில் சலிக்காமல் பணியாற்றினார். நாகை தொகுதியில் மக்கள் பிரச்சினையில் சோர்வடையாமல் ஓய்ந்து விடாமல் முனைப்போடு செல்வராஜ் செயல்பட்டார் என முத்தரசன் கூறியுள்ளார்.


இதனிடையே எம்.பி., செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்வராஜ் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். டெல்டா மாவட்ட ரயில் திட்டங்கள், வேளாண் மக்கள் உரிமைக்காக பல போராட்டங்கள் நடத்தினார். செல்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நாகை தொகுதி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.