Seeman | `பாஜகவிடம் திமுக அடிபணிந்துவிட்டது!’ - ஆளுநர் விவகாரம் தொடர்பாக சீமான் அறிக்கை!

திமுக அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

Continues below advertisement

`பாஜகவிடம் திமுக அடிபணிந்து விட்டது. அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, ஆளுநரின் அதிகாரத்திற்கு அடிபணிந்து, மாநில உரிமையை பறிகொடுப்பது ஜனநாயகத்திற்குச் செய்யும் துரோகம்’ எனத் திமுக அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

Continues below advertisement

சமீபத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் அனைத்து துறைச் செயலாளர்களும் தங்கள் துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அதுகுறித்த செயலாக்கம் ஆகியவை குறித்த விவரங்களைத் தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 

கடந்த அதிமுக ஆட்சியில், அரசின் நடவடிக்கைகளில் ஆளுநரின் தலையீடு அதிகளவில் இருப்பதாகக் கூறி விமர்சனம் செய்து வந்தது திமுக. இந்நிலையில் திமுக ஆட்சியில் தமிழக ஆளுநருக்கு இப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவதும், திமுக தரப்பில் இருந்து மௌனம் மட்டுமே நிலவுவதாக இந்த விவகாரம் குறித்து சர்ச்சைகள் வெடித்தன. இதனைச் சரிசெய்யும் விதமாக, தமிழகத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இவ்வாறான சுற்றறிக்கைகள் வழக்கமான நடைமுறை தான் என்றும், நிர்வாக விவகாரங்களை இவ்வாறான அரசியல் பிரச்னைகளாக மாற்றுவது சரியல்ல என்றும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் இதுகுறித்த சரியான விவரங்கள் எதுவும் அரசின் தரப்பில் இருந்து வராததால், பிற கட்சிகள் இந்த விவகாரத்தில் திமுக அரசை விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளிடம் தலையிடுவதையும், இந்த விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறையையும் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனுப்பிய சுற்றறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், திமுக அரசின் தவறான முன்னுதாரணம் இது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

`ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறலுக்கு வழிவகுத்திடும் திமுக அரசின் இச்செயல் மிகத்தவறான முன்னுதாரணமாகும். இதற்கு ஐயா இறையன்பு போன்றவர்களும் துணைபோவது ஏமாற்றமளிக்கிறது. மதிப்புவாய்ந்த பெருந்தகைகள் இதுபோன்ற மதிப்பிழக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது. ஆளுநர் பதவி என்பது அலங்காரப்பதவிதானே ஒழிய, அதிகாரம் செலுத்தும் நிர்வாகப் பதவியல்ல. மாநில ஆட்சியமைப்பு முறைகளில் தலையிட ஆளுநருக்கென்று தனிப்பட்ட அதிகார வரம்புகள் எதுவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தில் வரையறுக்கப்பட்டவில்லை. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அமைச்சரவையின் நிர்வாகத்தின் ஆளுநர் தலையிட்டு, குறுக்கீடுசெய்து இடையூறு விளைத்திடுவது மக்களாட்சித்தத்துவத்தைக் குலைத்திடும் கொடுஞ்செயலாகும்.’ என்று இந்த விவகாரம் குறித்து சீமான் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், `ஏழு தமிழர் விடுதலைக்காக மாநில அரசு இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் தரமறுத்து தனது கடமையைச் செய்யத் தவறும் ஆளுநர், மாநில நிர்வாகத்தை ஆய்வுசெய்வதாகக் கூறுவது கேலிக்கூத்து’ என்றும் ஆளுநரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு, `‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என முழங்கிய அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சியில் நடத்துவதாகக் கூறும் திமுக அரசு, அதற்கு மாறாக ஆளுநரின் முடிவுக்கு அடிபணிந்து மாநில உரிமையைப் பறிகொடுப்பது மிகப்பெரும் சனநாயகத்துரோகமாகும்.’ என்று ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.    

Continues below advertisement