ராணுவத்தில் இணைந்தால் தான் தேசப்பற்று வரும் என்பது வேடிக்கையானது என்றும், ஆர்எஸ்எஸ்சின் கோட்பாடுகளை இளைஞர்களிடம் திணிக்கும் திட்டம் அக்னிபாத் திட்டம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 113ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதுரை, மேலூர் அருகேயுள்ள தும்பைபட்டி பகுதியில் நாம்தமிழர் கட்சி் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார்.
கொள்கையைத் திணிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான் கூறியதாவது:
’அக்னிபத் திட்டம்’ என்பது தவறானது. முன்னாள் ராணுவ வீரர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், அக்னிபத் மூலம் 4 ஆண்டுகளுக்கு ஆர்எஸ்எஸ் , பாஜகவின் கொள்கையை இளைஞர்களுக்கு மூளைச்சலைவை செய்து திணிக்க முயற்சிக்கிறார்கள் எனவும், 4 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு தொகை வழங்குவார்கள் எனவும் கூறியுள்ளனர். ஏற்கெனவே பாஜக சொன்ன 15 லட்சம் எங்கே போனது?
’குடியரசுத் தலைவருக்கும் தேர்தல் வேண்டும்’
மேகதாது தடுப்பணையை மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்ட நினைத்தால் அதனைக் கட்ட விடாமல் தடுப்போம். அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவர் சாதிரீதியாக மாணவர்களிடம் பேசியது கண்டிக்கதக்கது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
80 சதவிதம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றியதாகக் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நிறைவேற்றப்பட்ட 8 சதவீத வாக்குறுதிகளை சொல்லுங்கள் பார்ப்போம். நாம் தமிழர்களின் கோட்பாடு குடியரசுத் தலைவருக்கே தேர்தலே வேண்டும் என்பது தான். குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
’மோடி, ராஜ்நாத் சிங்குக்கு தேசப்பற்று இல்லையா?’
தமிழ்நாடு ஆளுநர் ஆர்எஸ்எஸ் ஆல் நியமிக்கப்பட்டவர். அதனால் அவர் ஆர்எஸ்எஸ்காரராக தான் இருப்பார் எனவும், ராணுவத்தில் சேர்ந்தால் தான் தேசப்பற்று என கூறுகிறார்கள் அப்படியெனில் மோடியும் ராஜ்நாத்சிங்கும் ராணுவத்தில் சேரவில்லையே. அவர்களுக்கு தேசப்பற்று இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
கணிணி யுகத்தில் கலைஞர் நூலகம் தேவையா என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், ”கலைஞர் நூலகம் காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட வேண்டும். நூலகம் குறித்து பேசுபவர்கள் அவர்களது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதற்கு என்ன சொல்வார்கள்? அவரவர் ஆட்சிக்காலத்தில் அவர்களது கொள்கைபடி செயல்படுகின்றனர்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்